வணிகம்

ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பலனா?

எஸ்பிஐ ஆய்வறிக்கை தகவல்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியாவுக்கு ரூ.27,000 கோடி வரை மிச்சமாகும் என எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அந்த அறிக்கையில், ‘இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும். குறிப்பாக, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக இந்தியா ஆண்டுக்கு 300 கோடி டாலரை, அதாவது ரூ.27,000 கோடியை மிச்சப்படுத்தும்.

          

வெனிசுலா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இது ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி நிறுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பையும் ஈடு செய்ய உதவும்.

அமெரிக்கா விதித்துள்ள வரிக் குறைப்பு, இந்தியப் பொருட்களின் ஏற்றுமதித் திறன் அதிகரிப்பு, பணவீக்கக் கட்டுப்பாடு போன்றவை இந்தியப் பொருளாதாரத்துக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன. எனினும், விவசாயம் மற்றும் பால் பண்ணை போன்ற முக்கிய உள்நாட்டு தொழில் துறைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.

குறிப்பாக, இந்திய விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பால் உற்பத்தித் துறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வர்த்தக தாராளமயமாக்கல் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதித் திறனை வலுப்படுத்துவதுடன், எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT