வணிகம்

மதுரையில் சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துமா அரசு?

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ள மதுரையில் சுற்றுலா சார்ந்து தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் தொன்மை யான நகரங்களுள் ஒன்றாகவும், கிழக்கின் ஏதென்ஸ் எனப் புகழப்படும் மாநகரமாகவும் திகழும் மதுரை தென் தமிழகச் சுற்றுலாவின் முக்கிய நுழைவு வாயிலாக விளங்குகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப் பூர்வ புள்ளிவிவரங்களின்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய தமிழக நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி மதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

2025 ஆகஸ்ட் மாதம் வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மதுரைக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென் தமிழகச் சுற்றுலாவின் முதன்மை மையமாக மதுரை இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இங்கு மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், அழகர் கோயில், மன்னர் திருமலை நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், சமணர்களின் வரலாற்று சின்னங்கள் உட்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் சந்திப்பாகவும், ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மூலமாகவும் மதுரை முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது.

ஐந்து நட்சத்திர விடுதிகள் முதல் பட்ஜெட் விடுதிகள் வரை சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. மதுரைக்கு வரும் பயணிகள், இங்குள்ள சுற்றுலா இடங்களை பார்த்த பிறகு ராமேசுவரம், கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர். எனவே, சுற்றுலா தொடர் பாக ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்க நிர்வாகி மகேந்திரவர்மன் கூறியதாவது: மதுரையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாவே முதுகெலும்பாக விளங்குகிறது. இதனால், மாநகரை தூய்மையாக பராமரிப்பதுடன், தரமான சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக மதுரை விமான நிலையத்தை முழுமையான சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். ஆசியான் மற்றும் வளைகுடா நாடுகளுடனான இருவழி ஒப்பந்தங்களில் மதுரையை சேர்க்க வேண்டும். மதுரையில் சுற்றுலா சார்ந்த முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதற்கு ஏதுவாக தென் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோரை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், சுற்றுலா சார்ந்த படிப்புகளுக்கான ஐஐடிடிஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்) என்ற சுற்றுலா சார்ந்த படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனத்தை மதுரையில் நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT