புதுடெல்லி: “வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது” என டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விளாடிமிர் புதின், “எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் நம்பகமான சப்ளையர் ரஷ்யா. வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்துக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியைத் தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். மேலும், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அதிகரிப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இருதரப்பு வர்த்தகத்துக்கு தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதை நோக்கி இந்தியாவும் ரஷ்யாவும் படிப்படியாக நகர்கின்றன.
சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை நிர்மாணிப்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய சர்வதேச தளவாட வழித்தடங்களை உருவாக்க ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன.
ரஷ்யா - இந்தியா உறவு என்பது வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதில், வார்த்தைகள் முக்கியமல்ல. சாராம்சம்தான் முக்கியமானது. இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். அதை நான் மிகவும் பாராட்டுகிறேன். நாங்கள் பல்வேறு துறைகளில் முன்னேற திட்டமிட்டுள்ளோம். இது எங்கள் உறவில் உள்ள நம்பிக்கையின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவு, விமான மேம்பாடு, உயர் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என தெரிவித்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா மீதான புதினின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி. எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூணாக இருந்து வருகிறது.
பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை 2030 வரை தொடர நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இரு நாடுகள் இடையே இன்று சுகாதாரம், கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது நமது வர்த்தகம் மற்றும் முதலீடு பன்முகத்தன்மை கொண்டதாகவும் சமநிலையானதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்" என தெரிவித்துள்ளார்.