“அமைதிப் பாதையை நோக்கி உலகை வழிநடத்துவோம்” - புதின் முன்னிலையில் மோடி பேச்சு

“அமைதிப் பாதையை நோக்கி உலகை வழிநடத்துவோம்” - புதின் முன்னிலையில் மோடி பேச்சு
Updated on
2 min read

புதுடெல்லி: உக்ரைனுடன் அமைதியான தீர்வுக்கு ரஷ்யா பாடுபடுகிறது என்றும் அமைதியின் பாதையில் பயணிப்பதன் மூலமே உலகம் பயனடையும் என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, அமைதிப் பாதையை நோக்கி உலகை வழிநடத்துவோம் என கூறினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் மோடியும் அவரை வரவேற்றனர். இதையடுத்து, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் சென்ற விளாடிமிர் புதின், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை புதின் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, “ரஷ்ய அதிபர் புதின் தொலைநோக்குடன் செயல்படக்கூடிய தலைவர். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.

ஒரு உண்மையான நண்பராக அவர் எல்லாவற்றையும் அவ்வப்போது எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார். நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தை (உக்ரைன் விவகாரம்) நான் உங்களுடன் பலமுறை விவாதித்துள்ளேன். அதனை உலகுக்கு முன்பாகவும் முன்வைத்துள்ளேன். அமைதியில்தான் நாடுகளின் நலன் அடங்கி இருக்கிறது. ஒன்றாக, உலகை அந்த பாதையை நோக்கி வழிநடத்துவோம்.

சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலம் உலகம் மீண்டும் அமைதியின் பாதைக்குத் திரும்பும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக சமீப நாட்களில் நான் உலக தலைவர்களிடம் பேசும்போதெல்லாம், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், இந்தியாவின் நிலைப்பாடு அமைதியின் பக்கமே உள்ளது என்றும் தெளிவாகக் கூறியுள்ளேன்.

அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.

பல்வேறு முன்னேற்றங்களுடன் இந்தியா - ரஷ்யா உச்சிமாநாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. உங்களின் (புதின்) இந்த வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தியாவுக்கான உங்கள் முதல் பயணம் நிகழ்ந்து 25 வருடங்கள் ஆகிறது. அந்த முதல் வருகையின்போது, இரு நாடுகளின் கூட்டாண்மைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. எங்கள் இருவருக்குமான உறவும் 25 ஆண்டுகளாக உள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனத் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய விளாடிமிர் புதின், “உக்ரைன் உடனான அமைதி முயற்சிகளில் இந்தியா கவனம் செலுத்துவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யாவும் இந்தியாவும் ராணுவம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து துறைகளிலும் முன்னேற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in