அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை முகப்பு தோற்றம் | சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்ட உயர்மட்ட ஆய்வுக் குழுவினர்.

 
வணிகம்

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறக்கப்படுமா?

ஒய்.டேவிட் ராஜா

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உயர்மட்ட ஆய்வுக் குழு 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து, விரைவில் இந்த ஆலை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி, கரும்பு விவசாயத்துக்கும் பெயர் பெற்றது. இதற்கு, இங்கு செயல்பட்டுவந்த தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையே காரணம். 137.68 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1963-ல் ஆயிரம் டன் கரும்பு அரைக்கும் திறனுடன் தொடங்கப்பட்டது. பின்னர், 2,500 டன் அரைக்கும் திறனுடன் மேம்படுத்தப்பட்டது.

இந்த ஆலைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வைத்து பயனடைந்து வந்தனர். ஆனால், கரும்பு வரத்து குறையத் தொடங்கியதாலும், 2019-ல் கரோனா பரவல் காரணமாகவும் அலங்காநல்லூர் ஆலை மூடப்பட்டது. இதனால், இந்த ஆலையை நம்பியிருந்த 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், இங்குள்ள பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.10 கோடி ஊதிய நிலுவையும் உள்ளதாக, தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக சர்க்கரை ஆலை இயக்குநர் அன்பழகன் தலைமையில், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், கடந்த 19-ம் தேதி இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள், ஆலை இயந்திரங்கள் மற்றும் கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன எனக் கூறியதாக, ஆலை நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன் கூறியதாவது: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 2,850 ஏக்கர், விருதுநகர் மாவட்டத்தில் 2,150 ஏக்கர், மதுரை மாவட்டத்தில் 1,980 ஏக்கர் நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆலை திறக்கப்பட்டால், இந்த கரும்புகள் அனைத்தும் இந்த ஆலைக்கு கொண்டுவரப்படும். இல்லையெனில், தஞ்சாவூருக்கோ, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கோ அனுப்பிவிடப்படும்.

எனவே, தமிழக அரசு இந்த ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர்மட்ட ஆய்வுக் குழுவினரிடம் எடுத்துக் கூறினோம். இதனால், வரும் 2026-ம் ஆண்டுக்குள் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் எனக் கூறினார்.

SCROLL FOR NEXT