வணிகம்

Surveillance pricing: ஆன்லைனில் நீங்கள் வாங்கிய அதே பொருளை மற்றவர் மலிவு விலையில் வாங்குகிறாரா?

பாரதி ஆனந்த்

ஆன்லைனில் நீங்கள் வாங்கிய அதே பொருளை உங்கள் நண்பரோ / அண்டை, அயலாரோ குறைந்த விலையில் வாங்கியதைக் கண்டு அதிர்ச்சியும் சோகமும் அடைகிறீர்களா? அதற்குக் காரணம் நீங்கள்தான். அதன் பின்னணியில் இருப்பது ‘கண்காணிப்பு விலை’ ( Surveillance pricing ) என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் பொருட்களில் விலை உங்களது தனிப்பட்ட டேட்டா, சூழல்... ஏன் உங்கள் செல்போன் பேட்டரி நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதென்ன ‘Surveillance pricing’? - நம் நடவடிக்கைகளைக் கண்காணித்து நாம் வாங்கும் பொருட்களின் விலை நிர்ணயமா? இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் போல் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு புள்ளிவிவரத்தைப் பகிர்ந்தது. அதில், 3% அளவிலான உள்ளூர் விமானப் போக்குவரத்துக்கான டிக்கெட் விலையை ஏஐ உதவியுடன் நிர்ணயிப்பதாகத் தெரிவித்தது.

அதேவேளையில், எந்தளவுக்கு அதனால் டிக்கெட் விலையில் வித்தியாசங்கள் இருக்கும் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏஐ உதவியுடன் 20% உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தது.

இந்த அறிவிப்பை ஒட்டி, எப்படி அந்த விமான நிறுவனம் ‘கன்ஸ்யூமர் டேட்டா’ வாடிக்கையாளர்கள் பற்றிய தரவுகளைப் பயன்படுத்தி அவர்களுக்கான டிக்கெட் விலையை நிர்ணயிக்கக்கூடும் என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்தன.

இதனை ‘டைனமிக் ப்ரைஸிங்’ என்று பல விமான நிறுவனங்களும் சூழலுக்கு ஏற்ப டிக்கெட் விலையை நிர்ணயிப்பதில் காலங்காலமாக பின்பற்றி வந்தாலும், ஏஐ உதவியுடன் விலை நிர்ணயிப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இத்தகைய நடவடிக்கையால் டேட்டா ப்ரைவஸி பாதிக்கப்படும் என்ற கவலைகளும் எழுப்பப்படுகின்றன.

அமெரிக்காவின் ஃபெடரல் வர்த்தக கமிஷனின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கண்காணிக்கின்றனர். அதாவது வாட்டிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைப் பெற எவ்வளவு செலவழிக்கத் தயாராக உள்ளனர் என்பதை அவர்கள் கண்காணிக்கின்றனர். ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு அதிகமாக செலவழிக்கிறார் என்பதை பெயின் பாயின்ட் (pain point) என்று அவர்கள் குறிப்பிட்டுகிறார்கள்.

இதனை, அக்கவுன்ட் ரெஜிஸ்ட்ரேஷன், இமெயில் சயின் அப் மற்றும் ஆன்லைன் பர்சேஸ் மூலம் நிறுவனங்கள் கணிக்கின்றன.

இது தவிர நுகர்வோர் கேட்ஜட்களின் ஐபி முகவரி, அந்த சாதனங்களின் தன்மை, அவர்கள் எதையெல்லாம் பிரவுஸ் செய்கிறார்கள் என்ற தகவல், மொழித் தேர்வு, ஸ்க்ராலிங் பேட்டர்ன்கள், என்ன மாதிரியான வீடியோக்களைப் பார்க்கின்றனர் என்பதையும் நிறுவனங்கள் கண்காணிக்கின்றன” என்றார்.

யாருக்கு ஆதாயம்? - இத்தகைய கண்காணிப்பு விலை நடைமுறை மூலம் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். கன்ஸ்யூமர் தரவுகள் மூலம் தான் ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு விலை என்பது நிர்ணயமாகிறது.

2024-ம் ஆண்டு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிஞர் ஒருவர் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில் ஆர், “மிகப் பெரிய தரவுகள், அல்காரிதம் அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

இந்த கன்ஸ்யூமர் டேட்டா மூலம், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நுணுக்கமாக வகைப்படுத்திக் கொள்கின்றனர். ஆண் / பெண்; இளைஞர்கள் / வயதானோர்; குழந்தைகள் போன்ற சாதாரண வகைப்பாடுகளைத் தாண்டி அவர்களின் வாங்கும் திறன், செலவழிக்கும் போக்கு, எந்தப் பொருளை அவர்கள் என்ன விலை கொடுத்தாவது வாங்க முற்படுவார்கள் என்பது வரை வகைப்படுத்துகின்றனர்.

இதன் அடிப்படையில் தான் ஒரே பொருள் பலருக்கு பல்வேறு விலையில் கிடைக்கிறது. சில நேரங்களில் ‘டிமாண்ட் கர்வ்’ எனப்படும் தேவையை அறிந்து விலையை நிர்ணயிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பொருளாதார நிபுணர், சில ரைட் ஷேரிங் ஆப்களில் (கார், டாக்ஸி சேவை ஆப்) ஒரே தொலைவுள்ள ஒரே வழித்தடத்திலான சேவைக்கு ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

வாடிக்கையாளர்களின் செல்போன் பேட்டரி அளவைக் கொண்டு கூட இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது குறைந்த பேட்டரி அளவு இருக்கும்போது வாடிக்கையாளர் அதிகம் காத்திருக்காமல் வாகனத்தை புக் செய்யவே விழைவார், அப்போது அவரிடம் அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்பதே நிறுவனங்களின் போக்கு என்று அவர் தனது ஆயில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் பிரபல டாக்ஸி / பைக் சேவை நிறுவனங்கள் இந்த ஆய்வறிக்கை புள்ளிவிவரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு பிரபல நிறுவனம் இது குறித்து, “நாங்கள் நெருக்கடியைப் பொறுத்து அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், இது ஓர் அடிப்படை மனித இயல்பு. எந்த ஒரு நபரும் தன் போனில் பேட்டரி அளவு குறைவாக இருக்கும்போது கட்டண பேரம் பேசாமல் ரைட் புக் செய்யவே விரும்புவார். கட்டணத்துக்காக அவர் அடுத்த 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமானால் அவர் பேட்டரி சார்ஜ் தீரலாம் என்பதை அவர் அறிந்திருப்பார்” என்று கூறியுள்ளது. 

பர்ஸ் பத்திரம் - மளிகை தொடங்கி மருந்து வரை எல்லாமே ஆன்லைன் டெலிவரி காலகட்டமாகிவிட்டது. ஒரு பண்டிகையை விடாமல் நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளித் தெளிக்கின்றன. உணவுக்கென்று ஒரு ஆப், ரைடுக்கு என்றொரு ஆப், மளிகைக்கென்று, மருந்துக்கென்று, மணமகன் / மணமகள் தேடவென்று, பொழுதுபோக்க என்ற ஆப்கள் குவிந்துள்ளன. எல்லாவற்றிலும் நாம் நம் பெயர் தொடங்கி அத்தனை விவரங்களையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

நம் பிரவுசிங் டேட்டாவை நம் குடும்பத்தினருக்கு வேண்டுமானால் ஹிஸ்டரி கிளியர் செய்து மறைக்கலாமே தவிர இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அல்ல. ஆக ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது என்ற பிக் பாஸ் வணிகக் கோட்டைக்குள் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம்.

ஆகவே, செலவழிப்பதில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது மட்டும் பர்ஸை பாதுகாக்கும். உஷார் நீங்கள் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறீர்கள்!

| கட்டுரை உறுதுணை: அல் ஜஸீரா |

SCROLL FOR NEXT