ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணத்திலும், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திலும் அமைய உள்ள மெகா டேட்டா சென்டரால் குடிநீர பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். டேட்டா சென்டர் அமைவதை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள், தண்ணீருக்கும் டேட்டா சென்டருக்கும் என்ன தொடர்பு, மக்களின் அச்சம் ஏன் என்பது குறித்து சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டிணம் மற்றும் அனாகாபள்ளி மாவட்டத்தில் ரெய்டன் இன்போ பிரைவேட் லிமிட், கூகுள், அதானி ஆகிய நிறுவனங்கள் தலா 1 ஜிகாவாட் செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டரை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக 601 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பால்கும் படா, மஜிவாடா பகுதியில் ரூ.7203.90 கோடி செலவில் 53.73 ஏக்கரில் ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு டேட்டா சென்டர் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடந்த வாரத்திலிருந்து தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் போராட்டம் ஏன்?
விசாகப்பட்டிணம், அனாகாபள்ளியில் ஏற்கெனவே கடும் தண்ணீர் பற்றாக்குறையும், மின்வெட்டு பிரச்சினையும் இருக்கிறது. சூப்பர் எல் நினோ தாக்கத்தால் மழையும் பொய்த்துவிட்டது, குடிநீரும் ரேஷன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டேட்டா சென்டர் அமைந்தால், குடிநீர் அனைத்தும் அதற்கு திருப்பிவிடப்படும் என விசாகப்பட்டிணம் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
அதேபோல தானே மாவட்ட மக்களும் “டேட்டா சென்டர் அமைந்தால், நிச்சயம் குடிநீர் பிரச்சினை ஏற்படும். உள்ளூர் மக்களிடம் கலந்து பேசாமல் திட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என்று கூறி, “விழித்துக்கொள்ளுங்கள் தானே மக்களே” என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோஹன் ஹதன்காடி கூறுகையில், “தொழில்நுட்பம் வருவதற்கோ அல்லது முதலீட்டையோ எதிர்க்கவில்லை. திட்டத்தால் கிடைக்கும் குறைந்த பலனைத்தான் எதிர்க்கிறோம். இந்தத் திட்டத்தால் மிகக் குறைவான நிரந்தர வேலைவாய்ப்புகளே கிடைக்கும். துணைத் தொழில்களின் வளர்ச்சி குறைவு” எனத் தெரிவித்தார்.
கிரீன் விசாகா அமைப்பின் தலைவர் ராஜா ராம் கூறுகையில் “டேட்டா சென்டர் அமைவதால் இயற்கை இரக்கமின்றி சுரண்டப்படும். காடுகள் அழிக்கப்படும். விசாகப்பட்டிணத்தில் நுரையீரலாக கம்பலகொண்டா வனப்பகுதி இருக்கிறது. இந்தத் திட்டத்தால் ரம்பிலி வனவிலங்கு சரணாலயத்துக்கும் ஆபத்தாக அமையும். நகரில் பெரும் குடிநீர் பிரச்சினை ஏற்படும். இயற்கை சூழல் பாதிக்கப்படும். திட்டத்தை அமராவதிக்கு மாற்றலாம்” எனத் தெரிவித்தார்.
தானேயில் உள்ள சமூக ஆர்வலர் சாதனா பிரதான் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் எதற்கு டேட்டா சென்டர். இதனால் குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகும். மாநில அரசின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க இருக்கிறோம். மாநில அரசுடன் பேச்சு நடத்திய பின், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடர உள்ளோம். எங்களின் அடிப்படைக் கேள்விக்குக் கூட அதிகாரிகள் பதில் அளிக்காததும், டேட்டா சென்டர் சர்வர்களை குளிர்விக்க தண்ணீர் எங்கிருந்து கொண்டுவருவீர்கள் எனக் கேட்டதற்கும் பதில் இல்லை” எனத் தெரிவித்தார்.
தண்ணீர் குறித்த கவலைகள் என்ன?
விசாகப்பட்டிணம் மாநகராட்சியின் குடிநீர் சப்ளை தலைமைப் பொறியாளர் முரளி கிருஷ்ணா கூறுகையில், “விசாகப்பட்டினத்தைப் பொறுத்தவரை, நீரைச் சேமிக்க போதுமான சேமிப்பு வசதி இல்லை. நீர்த் தேக்கங்களுக்காக ஏறக்குறைய 1,000 முதல் 2,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டியது அவசியம் அப்படி இருக்கும்போது டேட்டா சென்டருக்கு தண்ணீர் எவ்வாறு வழங்குவது?” எனக் கேள்வி எழுப்பினார்.
தானே டேட்டா சென்டர் என்பது 422 மெகாவாட் திட்டமாகும். இதனை செயல்படுத்த 193 மின்மாற்றிகள் தேவைப்படும். இதற்காகத் தேவைப்படும் நீர் தேவை குறித்து அமேசானும், அரசாங்கமும் இரு வேறு புள்ளிவிவரங்களைத் தருகிறார்கள். தினசரி 125 கிலோ லிட்டர் நீர் தேவை என அமேசானும், 12 மில்லியன் லிட்டர் தேவை என மாநகராட்சியும் தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே மக்களுக்காக 40 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையாக இருக்கும்போது, எவ்வாறு டேட்டா சென்டருக்கு நீர் வழங்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த மாதம் அமேசான் தனது டேட்டா சென்டர் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தில், ‘தானேவில் அமைந்துள்ள டேட்டா சென்டரை குளிர்விக்க எந்த நீரையும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம். உண்மையில், இந்தியாவில் உள்ள எங்கள் எந்த டேட்டா சென்டரிலும் சர்வர்களை குளிர்விக்க நாங்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. உள்ளூர் மக்களின் குடிநீர் ஆதாரங்களிலிருந்தும் எடுப்பதில்லை. தானே டேட்டா சென்டருக்கு தினசரி 0.01 மில்லியன் லிட்டர் தேவை. அதுவும் ஊழியர்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும்தான்’ எனத் தெரிவித்துள்ளது.
தண்ணீருக்கும், டேட்டா சென்டருக்கும் என்ன தொடர்பு?
டேட்டா சென்டர் என்பது நெட்வொர்க் கருவிகள், செயலிகள், சேவைகள் ஆகியவற்றை பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்கச் செய்யும் ஒரு பிரம்மாண்ட கட்டிடம். டேட்டா சென்டர்களில் வைக்கப்பட்டிருக்கும் கணினிகள், சர்வர்கள் சூடாகாமல் இருக்க குளிரூட்டும் அமைப்பும், மின் தடை ஏற்படாதவாறு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
கூகுள் ஏஐ, மெட்டா ஏஐ, சாட்ஜிபிடி, க்ளவுட் போன்ற ஏஐ தளத்தில் ஏதேனும் கேள்வி கேட்ட உடனே பதில் அளிக்கும் நுட்பம் இயங்குவதற்கு சர்வர்கள் எவ்வளவு அவசியமோ, அதை குளிர்விக்க, தண்ணீரும் அவசியம்.
சர்வர்களையும், டேட்டா சென்டர்களையும் குளிர்விக்க தண்ணீரும், மின்சாரமும் தேவை. அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவை என்பதால் தண்ணீருக்கும், டேட்டா சென்டருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மிகப் பெரிய டேட்டா சென்டர்களில் லட்சக்கணக்கான சர்வர்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டு இயங்கும்போது அதிகமான வெப்பம் வெளியேற்றப்படும்.
சர்வர்கள் வெப்பமடையாமல், பழுதடையாமல் தடுக்கவே தண்ணீர் மூலம் குளிர்விக்கப்படுகிறது. மற்ற தொழில்களைப் போல் தண்ணீரை மூலப் பொருளாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் சாதாரண நீரைப் பயன்படுத்தாமல், ப்ரெஷ் வாட்டர், அதாவது மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நீரைப் பயன்படுத்தும்போதுதான் மக்கள் எதிர்க்கிறார்கள்.
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் டேட்டா சென்டர் அமைவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை புரிந்துகொண்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.