- இப்படியாக போருக்கும் தங்கம் விலை உயர்வுக்கும் நேரடி தொடர்புடைய தலைப்புச் செய்திகளைத்தான் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் பிப்ரவரி 28-ம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய மறுநாள் மார்ச் 1, தங்கம் விலை எகிறியது. இனி தங்கம் விலை விர்ரென்று ஏறப்போகிறது என்று அஞ்சப்பட்ட நிலையில், சிறிய ஊசலாட்டத்துக்குப் பின்னர் இப்போது நிதானமாக இறங்கு முகம் கண்டு வருகிறது.
தங்கம் விலை மீது மேற்கு ஆசிய போர் பதற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்னவென்பது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
சென்னையில் மார்ச் 17, செவ்வாய்க்கிழமை தங்கம் 10 கிராம் ரூ.1,59,820-க்கு விற்பனையாகிறது. சமீப கால மிரட்டும் உச்சங்களில் இருந்து தங்கம் இந்த இறங்குமுகத்தைக் கண்டுள்ளது. கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.4,000 அளவுக்கு குறைந்துள்ளது.
இந்த இறங்குமுகம் வழக்கத்துக்கு மாறானது. புவி அரசியலில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிப்பர். ஆனால், இந்த முறை தங்கம் விலை அவ்வாற்று நாடப்பட்டு விலையுயர்வு காணவில்லை.
இந்த நிலைமாற்றம் மிக முக்கியக் கேள்வியை நம்முள் எழுப்பலாம். இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் தங்கம் விலை குறைவது ஏன் என்ற அந்தக் கேள்விக்கு விடை தேடுவோம்.
தங்கம் தகிக்காதது ஏன்?
மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியும் சேதமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் எண்ணெய் மற்றும் எல்பிஜி, எல்என்ஜி கப்பல் போக்குவரத்து பாதிப்பு எண்ணெய், எரிவாயு விநியோகச் சங்கிலியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்பது, உலக நாடுகளில் பணவீக்கத்தை எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் உயர்ந்தே இருக்கச் செய்யும் என்ற அச்சத்தைக் கடத்தியுள்ளது. அந்த வகையில் பணவீக்க அச்சம்தான் தங்கம் விலை சரிவுக்கு முதன்மைக் காரணம் என்று கணிக்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகமாக இருந்தால், மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்காது. மேலும், விலைவாசி ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கவே முற்படும். உலகச் சந்தைகள் இப்போதைக்கு இதை நோக்கியே செல்லக் கூடும். குறிப்பாக, அமெரிக்காவின் மத்திய வங்கியின் நிதிக் கொள்கை என்னவாக இருக்குமென்பதில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. இது தங்கத்தின் மீது நேரடியான தாக்கத்தைக் கடத்துகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு என்பது நேரடியாக நிலையான வருமானத்தைத் தருவது அல்ல. பாண்ட்கள், டெபாசிட்டுகள் போல் இவை ரிட்டர்ன்கள் தருவதில்லை. அப்படி இருக்கையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பதால் நாட்டின் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிலையான வருமானம் தரக்கூடிய சொத்துகள் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவர். அத்தகைய நேரங்களில் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறையும். இதனால் தங்கம் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.
ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம்..
இதுதவிர இன்னொரு காரணமும் கூறப்படும். தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புதிய உச்சங்களைத் தொட்டுவிட்ட நிலையில், இத்தகைய உச்சத்துக்குப் பின்னர் முதலீட்டாளர்கள் ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்கத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் முதலீட்டு கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.
இவ்வாறாக, உலகாளவிய சந்தைகள் புவிசார் அரசியல் பதற்றங்களைக் காட்டிலும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாலேயே தங்கம் விலை குறைகிறது என்றளவில் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
டாலர் செலுத்தும் தாக்கம்...
பணவீக்கப் பிரச்சினையையும் தாண்டி, மத்திய வங்கிகளின் வட்டி விகித அச்சுறுத்தல்களையும் விட அமெரிக்க டாலர் மதிப்பு நிலவரமும் தங்கம் விலையை நிர்ணயிக்கிறது.
இதுபோன்ற சர்வதேச அளவிலான பொருளாதார நிச்சயமற்ற சூழல்களில், தங்கமும், டாலரும் தான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் டாலர் அதிக புழகத்தை ஈர்க்கிறது. டாலரின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தை மற்ற நாணயங்களைக் கொண்டு வாங்குவது என்பது கைக்கு எட்டாத விலையாகிவிடுகிறது.
இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையை குறைக்கிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறையும்போது அதுவும் தங்கம் விலை மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்துகிறது. ஆக, டாலர் மதிப்பின் எழுச்சியும் தங்கம் விலை சரிவுக்கு மற்றொரு காரணம்.
இப்போது தங்கம் வாங்கலாமா?
தங்கம் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் எழும் இன்னொரு கேள்வி... ‘தங்கத்தை இப்போது வாங்கலாமா?’ என்பதுதான்.
தங்கம் இன்றும்கூட பாதுகாப்பான முதலீடு என்ற முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. தற்போதைக்கு சர்வதேச நிகழ்வுகளுக்கு தங்கம் காட்டும் எதிர்வினைகள் மட்டும்தான் மாறியுள்ளது. அதனால், தங்கம் மீதான முதலீடு இப்பவும் பாதுகாப்பானதே.
வட்டி விகிதங்கள், பணவீக்கம் மீதான எதிர்பார்ப்புகள், நாணய வர்த்தகப் போக்கு ஆகியன புவி அரசியல் பாதிப்புகளையும் கடந்து மிகப் பெரிய பங்காற்றி வருகின்றன.
அதனால்தான் மேற்கு ஆசியாவின் இந்த உச்சபட்ச கொந்தளிப்புக்கு இடையேயும் தங்கம் விலை தகிக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு இந்த புவி அரசியல் பதற்றத்தையும் தாண்டி உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் பிடியில்தான் தங்கம் விலை சிக்கியுள்ளது. வட்டி விகிதங்களில் தெளிவான ஒரு போக்கு ஏற்படும் வரை தங்கம் விலை இத்தகைய குறுகிய வரம்பில் தொடர்ந்து நகரக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.