கோவை: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு கோவையில் இருந்து வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான போர் உலக நாடுகளிடையே இறக்குமதி, ஏற்றுமதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவைக்கு பெருமை சேர்க்கும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. தற்போது வளைகுடா நாடுகளுக்கு கப்பல் வழியாக அனுப்பப்படும் கிரைண்டர்கள், ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியதால் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரி பாகம் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் சவுந்திரபாண்டியன் கூறியதாவது: இந்த போர் காரணமாக, வெட்கிரைண்டர் ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஏற்கெனவே இந்த தொழில் பல்வேறு இடையூறுகளையும், சிரமங்களையும் சந்தித்து வருகிறது. போருக்கு முன்பாகவே உயரத்தொடங்கிய மூலப்பொருட்களின் விலை தற்போது வரை குறையவில்லை. காப்பர் வயர் கடந்த 2 மாதங்களில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
கிரைண்டர் மோட்டாருக்கு அத்தியாவசியமாக காப்பர் தேவை. காப்பர் மட்டுமின்றி ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். போர் காரணமாக பெட்ரோலியம் தயாரிப்பு பொருட்கள் விலையேறும்போது, மூலப்பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் தான் உள்ளது.
வீட்டு உபயோகப் பொருளான வெட்கிரைண்டருக்கு ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும், என்றார். வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் லீலா கிருஷ்ணன் கூறும்போது, “வளைகுடா நாடுகளில் ரம்ஜான் ஆர்டர் இருக்கும். இங்கிருந்து ஆண்டுதோறும் மிக்ஸி, கிரைண்டர் கணிசமான அளவு ஏற்றுமதியாகிறது.
ஆனால் தற்போது போர் பதற்றம் காரணமாக சென்ற கப்பல்களும் பொருட்களோடு டெலிவரி செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. துறைமுகங்களில் உள்ள கன்டெய்னரில் மிக்ஸி, கிரைண்டர்கள் தேங்கிக் கிடக்கின்றன.
பொருள் டெலிவரி ஆகாததால், கட்டணம் அதிகமாகும் என்றும், திரும்ப பொருளை இங்கு கொண்டுவருவதென்றால் அதற்கும் செலவாகும் என்றும் சொல்கின்றனர். இதனால் பலரும் என்ன செய்வ தென்று தெரியாமல் இருக்கிறோம்.
பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. தாமதமாக டெலிவரி செய்தால் அந்த கிரைண்டர் மற்றும் மிக்ஸிக்கான பணமும் திரும்ப வர வாய்ப்பு குறைவாக இருக்கும். ஒரு கன்டெய்னரில் ரூ.20 லட்சம் முதல் ரூ.22 லட்சம் மதிப்பிலான கிரைண்டர்கள் உள்ளன” என்றார்.