புதுடெல்லி: தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அறிவுரைக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையில், லட்சக்கணக்கான நகை வியாபாரிகள் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பியுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்சபை(சிடிஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல், பொதுச்செயலாளர் குர்மீத் அரோரா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டுமென நீங்கள் அறிவுரை வழங்கியபோது(மே மாதம்), ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1.90 கோடி.
தற்போது ரூ.1.25 கோடி. உங்கள் பேச்சைக் கேட்காமல் அப்போது வியாபாரிகள் தங்கத்தை வாங்கிச் சேர்த்திருந்தால், இன்று கிலோவுக்கு ரூ.65 லட்சம் நஷ்டத்தைச் சந்தித்து, லட்சக்கணக்கான வியாபாரிகள் கடனில் மூழ்கித் திவாலாகியிருப்பார்கள். கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் உங்களின் இந்த எச்சரிக்கையால் தப்பியுள்ளனர்.
தங்கம் விலை குறைந்திருப்பது சாமானிய மக்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் முகூர்த்த காலத்தில் (சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் சீசன்) குடும்பத்தினர் குறைந்த விலையில் தங்க நகைகளை வாங்க முடியும்.
ஆரம்பத்தில் உங்கள் அறிவுரையை எதிர்த்த வியாபாரிகள் கூட இப்போது ‘மோடி ஜி எங்களைக் காப்பாற்றிவிட்டார்’ என்று கூறி வருகிறார்கள். பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தைத் தடுக்கவும் உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.