

இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய முயற்சியாக, காபந்துப் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காடி ஐசன்கோட் அழைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அக்டோபர் 27 அன்று நடைபெற்ற தேர்தலில், 120 இடங்களைக் கொண்ட நெசெட் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், ஐசன்கோட் கூட்டணி 48 இடங்களையும் வென்றன. அரபுக் கட்சிகள் 19 இடங்களைப் பெற்றன. எந்த அணிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து முன்னாள் ராணுவத் தளபதி ஐசன்கோட்டுக்கு ஆட்சி அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. நவம்பர் 8 அன்று அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் அந்தப் பொறுப்பைப் பெற்ற ஐசன்கோட், டிசம்பர் 6-க்குள் ஆட்சி அமைக்க வேண்டும்.
இந்நிலையில், அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைக்கும் திட்டத்தை ஐசன்கோட் கட்சி கைவிட வேண்டும், பாலஸ்தீன தனிநாட்டை எதிர்க்க வேண்டும், பாதுகாப்பு மண்டலங்களில் இஸ்ரேலியப் படைகள் தொடர வேண்டும், ஹமாஸின் “நுக்பா” பிரிவினருக்கான சிறை நிபந்தனைகளைத் தளர்த்தக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை லிகுட் கட்சி முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கோரிக்கைகள் குறித்து இரு கட்சிகளும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
19 இடங்களைக் கொண்ட அரபுக் கட்சிகளின் வெளியாத ரவைப் பெறுவது தொடர்பாக, எதிர்க்கட்சி அணிக்குள்ளேயே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. அரபுக் கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் அரசில் சேரமாட்டேன் என்று அவிக்டோர் லிபர்மன் கூறியுள்ளார்.
லிகுட் கட்சியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், சிறுபான்மை அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் ஐசன்கோட் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் காபந்துப் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காடி ஐசன்கோட் அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
77 வயதான நெதன்யாகு, 2022 டிசம்பர் முதல் தீவிர வலதுசாரி அரசுக்குத் தலைமை வகித்து வருகிறார். லஞ்சம், மோசடி, நம்பிக்கை மீறல் வழக்கு அவர் மீது நடந்து வருகிறது.