புதுடெல்லி: வாரத்துக்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் இந்தியா வாங்கி குவித்து வருவதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ரஷ்ய கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஒன்று, தென் சீனக் கடலில் திடீரென தனது பயணப் பாதையை மாற்றிக் கொண்டது.
தற்போது அந்த கப்பல் அதிவேகமாக இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் சீனாவுக்குச் செல்ல வேண்டிய பல கப்பல்கள் மற்ற நாடுகளுக்குத் திருப்பிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே வாரத்தில் ரஷ்யாவிடம் இருந்து சுமார் 3 கோடி பேரல்களுக்கு மேல் கச்சா எண்ணெய்யை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ‘வோர்டெக்ஸா’ நிறுவன தரவுகளின்படி, குறைந்தது 7 ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் சீனாவுக்குப் பதில் இந்தியாவுக்குத் தங்கள் இலக்கை மாற்றியுள்ளன. கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, ‘அக்வா டைட்டன்’ என்ற கப்பல் மார்ச் 21ம் தேதி நியூ மங்களூரு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, கஜகஸ்தானின் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு சீனாவுக்குச் செல்ல வேண்டிய ‘ஜூஜூ என்’ என்ற கப்பலும் மார்ச் தொடக்கத்தில் தனது பாதையை மாற்றி மார்ச் 25ல் குஜராத்தின் சிக்கா துறைமுகத்தை வந்தடையும் என தெரிகிறது. இவ்வாறு ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.