புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு கூறியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலால், மத்திய கிழக்கு ஆசிய வான் பரப்பு மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வான் பரப்பு மூடப்பட்டிருக்கும் சூழலில், அந்தப் பகுதியில் விமானங்களை இயக்குவது பாதுகாப்பானதாக இருக்காது. இதுவரை கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி, வான் பரப்பு முடக்கத்தால் இந்திய விமான நிறுவனங்கள் 4,335 விமான சேவைகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 1,187 விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளன.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை அந்தந்த நாட்டு விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. விமானங்களை இயக்கச் சாதகமான சூழல் நிலவிய நேரங்களில் மட்டும் சேவைகள் தடையின்றி வழங்கப்பட்டன.
இந்த இக்கட்டான காலக்கட்டத்திலும் சுமார் 2,19,780 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். வான் பரப்பு திறக்கப்பட்டு, பயணம் செய்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் உருவான பிறகுதான் வழக்கமான விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும். இவ்வாறு ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.