புதுடெல்லி: உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு மத்தியில், விலை குறைவான வெனிசுலா கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
எரிசக்தி சரக்கு போக்குவரத்து தரவுகளைக் கண்காணிக்கும் ‘கெப்ளர்' நிறுவனத்தின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு மே மாதத்தில் மட்டும் வெனிசுலாவிடமிருந்து நாள் ஒன்றுக்கு 4.17 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதத்தின் (2.83 லட்சம் பேரல்) அளவை விடப் பெருமளவு அதிகமாகும். கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யாத நிலையில், தற்போது வெனிசுலாவிடமிருந்து இறக்குமதி கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியப் போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் ஆகியவற்றால் இந்தியா தனது இறக்குமதி உத்தியை மாற்றி அமைத்துள்ளது.
தற்போது, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக வெனிசுலாவிடமிருந்து தான் இந்தியா அதிக அளவிலான எண்ணெயை கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கெப்ளர் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்புக்கு அதன் விலைதான் முக்கிய காரணம். சர்வதேச சந்தையில் மற்ற எண்ணெய் வகைகளை விட வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மலிவாகக் கிடைக்கிறது.
இது குறித்து ‘கெப்ளர்’ நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் நிகில் துபே கூறுகையில், ‘‘பொருளாதார ரீதியான லாபம் மற்றும் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளின் சுத்திகரிப்பு கட்டமைப்புக்கு ஏற்றதாக இருப்பதால், இந்திய நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெய் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன’’ என்றார்.