புதுடெல்லி: இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் வாகன விற்பனை 26% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதன்படி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைந்ததால் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒட்டுமொத்தமாக 24,09,362 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வாகன விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு (எப்ஏடிஏ) தெரிவித்துள்ளது. இது கடந்த 2025-ம் ஆண்டின் பிப்ரவரி மாத விற்பனையான 19,17,934 உடன் ஒப்பிடும்போது 25.62% அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு 13,60,155 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனை, இந்த ஆண்டு பிப்ரவரியில் 17,00,505 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல, கார் விற்பனை 3,13,015-லிருந்து 3,94,768 ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 78,219-லிருந்து 1,00,820 ஆகவும், 3 சக்கர வாகனம் மற்றும் டிராக்டர் விற்பனை 89,418-லிருந்து 1,17,130 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எப்ஏடிஏ தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, திருமண சீசன், புதிய மாடல்களின் அறிமுகம் ஆகிய காரணங்களால் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்தது'' என கூறப்பட்டுள்ளது.