வணிகம்

கவுதம் அதானி மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

டெக்ஸ்டர்

வாஷிங்டன்: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் அமெரிக்க நீதித் துறை அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் திறக்க முடியாதபடி நிரந்தரமாக தள்ளுபடி செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்குச் சுமார் 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இந்த விபரங்களை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்துக் கடன் திரட்டியதாகவும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்தன. 

இந்தச் சூழலில், கடந்த வாரம் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தொடர்ந்த சிவில் வழக்குகளில், கவுதம் அதானி 6 மில்லியன் டாலரும், சாகர் அதானி 12 மில்லியன் டாலரும் அபராதமாகச் செலுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, தனிநபர் பிரதிவாதிகளுக்கு எதிரான இந்த வழக்குகளுக்கு மேல் தங்களுடைய கூடுதல் ஆதாரங்களையும் நேரத்தையும் செலவிட அமெரிக்க நீதித் துறை விரும்பவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

அதானி தரப்பில் ஆஜரான புதிய வழக்கறிஞர் குழு, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளிடம் இந்த வழக்கை நடத்துவதற்கான அடிப்படை ஆதாரங்களோ அல்லது சட்ட எல்லையோ இல்லை என்பதை விரிவான விளக்கங்கள் மூலம் நிரூபித்ததை அடுத்தே இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசுத் தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தத் தள்ளுபடி 'வித் ப்ரெஜுடிஸ்' என்ற சட்டப்பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆதாரங்களைக் கொண்டு அதானிக்கு எதிராக இதே வழக்கை அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மீதிருந்த சர்வதேச அளவிலான சட்டச் சிக்கல்கள் அனைத்தும் முழுமையாக நீங்கியுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT