வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. அந்த நாட்டில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் (எப்இடி) உயர்நிலை கூட்டம் கடந்த இரு நாட்களாக வாஷிங்டனில் நடைபெற்றது. எப்இடி தலைவர் ஜெரோம் பாவெல், துணைத் தலைவர் ஜெபர்சன் மற்றும் கவர்னர்கள் உட்பட 12 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப் பின்மையை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை குறைக்க எப்இடி தலைவர் ஜெரோம் உட்பட 9 பேர் ஆதரவு அளித்தனர். 3 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின்படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல், வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “வேலைவாய்ப்புகளை பெருக்கவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலைப்படுத்தவும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறோம். இதன்படி அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் என்ற வரம்பில் இருக்கும்” என்றார்.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பரில் வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்பிறகு கடந்த நவம்பரில் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 3 முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு சாதகம்: இதுதொடர்பாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது. இது இந்திய ரூபாய் உட்பட பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கு சாதகமாக அமையும்.
தங்கம், வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்படும். அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அந்நிய முதலீடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.