படம்: மெட்டா ஏஐ
இன்றைய தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் நிதி அமைப்பில், ‘அமெரிக்காவுக்கு ஜலதோஷம் பிடித்து தும்மல் வந்தால், உலகம் முழுமைக்கும் தும்மல் பிடிக்கும்’ என்பது நிதி உலக மொழியாக மாறிவிட்டது. இதுவே நிதர்சனமான பொருளாதார உண்மையும் கூட.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ எடுக்கும் ஒரு சிறு கொள்கை முடிவும், பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் நிதி நிலைமையை அதிரவைக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில், அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவு, இந்தியப் பொருளாதாரம், ரூபாயின் மதிப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளில் ஆழமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை.
குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி தன் வட்டி விகிதங்களை உயர்த்தும்போது, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு கடுமையான இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஒருபுறம் ரூபாயின் வீழ்ச்சியையும், அந்நிய மூலதனப் வெளியேற்றத்தையும் தடுக்க வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம். மறுபுறம் வட்டி உயர்த்தப்பட்டால் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி முடங்கும் அபாயம், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் என ரிசர்வ் வங்கி வரும் நாட்களில் கடும் அழுத்தத்துக்கு ஆளாகும்.
ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு என்றால் என்ன?
அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீதத்தைத் தாண்டி 3.4 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, ஃபெடரல் வங்கி வட்டி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் வட்டியை குறைக்க வலியுறுத்திய போதிலும்கூட, ஃபெடரல் வங்கித் தலைவர் கெவின் வார்ஷ் வட்டியை உயர்த்தியுள்ளார். 2023 ஜூலைக்குப் பின் இப்போதுதான் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 3.4% என கட்டுப்பாட்டு அளவான 2 சதவீதத்தைக் கடந்து சென்றுவிட்டது. வட்டி வீதத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டது.
வட்டியை உயர்த்துவதால் என்ன நடக்கும்?
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டியை உயர்த்தியதால், அங்குள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு (Treasury yields) அதிக வட்டி கிடைக்கும். இது டாலர் சார்ந்த சொத்துகளின் லாபத்தை உயர்த்தும். இதனால் வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் தவிர்ப்பார்கள்.
ஏனென்றால் அமெரிக்கா முதலீட்டுக்கு பாதுகாப்பான சந்தை என்பதால், ‘அதிக வட்டி கிடைக்கும்போது ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்?’ என்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FPIs) தங்கள் முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து திரும்பப் பெறலாம். செப்டம்பர் நடுப்பகுதி வரை சுமார் ரூ.14,475 கோடி மதிப்பிலான இந்தியப் பங்குகளை விற்று முதலீட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய ரூபாய்க்கு என்ன நெருக்கடி?
செலாவணிச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஏறக்குறைய ரூ.96 எனச் சரிந்துவிட்டது. கச்சா எண்ணெய் பேரல் 100 டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது. அந்நிய முதலீடு வெளியேற்றம், ஃபெடரல் வட்டி உயர்வு போன்றவற்றால் டாலரின் தேவை அதிகரித்து ரூபாயின் மதிப்பு வரும் நாட்களில் மேலும் சரிவடையலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரூபாய் மதிப்பு குறையும் போது, இறக்குமதியாளர்கள் அதிகமான டாலர் கொடுத்து கச்சா எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்களை வாங்க வேண்டியிருக்கும். டாலரை வாங்க அதிகமான பணத்தை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், உள்நாட்டில் பணவீக்கத்தை தூண்டும். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) லாபத்தைப் பாதிக்கும், இதனால் சந்தையில் இருந்து முதலீட்டை திரும்ப எடுக்க முடிவெடுக்கலாம்.
ஆர்பிஐ-க்கு அழுத்தமா, வட்டி வீதம் அதிகரிக்குமா?
அமெரிக்க கூட்டாட்சி வங்கியின் தீர்மானத்தால் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்கவும், இறக்குமதி மூலம் ஏற்படும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல், வருங்காலத்திலும் கடுமையான நிதிக் கொள்கையைத் தொடர திட்டமிட்டுள்ளது.
வட்டி குறைப்பில் தாமதம்:
இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறுவதைத் தடுக்க, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் இறுக்கமான நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி கடைப்பிடிக்கும்.
கடன் பெறும் செலவுகள் அதிகரிப்பு:
வட்டி குறைக்கப்படாததால், வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வட்டி விகிதம் குறையாது. இதனால் மாதத் தவணை செலுத்துவதிலும் உடனடி நிவாரணம் இருக்காது.
கடன் சந்தை வருவாய்கள்:
அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பைப் பின்பற்றி, இந்திய அரசுப் பத்திரங்களின் வருவாயும் வலுவடையலாம். இது அரசு மற்றும் பெருநிறுவனங்கள் கடன் திரட்டும் செலவை உயர்த்தும்.
பங்குச்சந்தை தாக்கம் என்ன?
அமெரிக்க நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) அதிக லாபம் கிடைப்பதற்காக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளில் பணத்தை முதலீடு செய்வார்கள். ஃபெடரல் வங்கி வட்டி உயர்வால், அவர்கள் இந்தியப் பங்குகளை விற்றுவிட்டு, தங்கள் பணத்தைப் பாதுகாப்பான அமெரிக்க வங்கிகளிலோ அல்லது அரசுப் பத்திரங்களிலோ (US Treasury Bonds) முதலீடு செய்யத் தொடங்குவார்கள்.
அதிக அளவிலான பங்குகள் விற்கப்படுவதால், இந்தியப் பங்குச்சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவைச் சந்திக்கும்.
முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்கும்போது, ரூபாயைக் கொடுத்துவிட்டு டாலராகவே பணத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வார்கள். இதனால் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.
பல பெரிய இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் (டாலரில்) கடன் வாங்கியிருக்கும். டாலர் மதிப்பு உயரும்போது, அந்த நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனின் தொகையும் வட்டியும் ரூபாயின் மதிப்பில் அதிகமாகும். இதனால் நிறுவனங்களின் லாபம் குறைந்து, அவற்றின் பங்கு விலைகள் சந்தையில் வீழ்ச்சியடையும்.
அமெரிக்காவில் வட்டி உயர்ந்து, ரூபாயின் மதிப்பு சரியும்போது, அதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கியும் இந்தியாவில் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறுகிய காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பில் அழுத்தத்தையும், பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தினாலும், இந்தியாவின் வலுவான உள்நாட்டு நுகர்வு, போதிய அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் நிலையான பொருளாதார அடிப்படைகள் காரணமாக இந்தியாவால் இந்த நிதி நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.