வணிகம்

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதியை நீட்டித்தது அமெரிக்கா

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நிம்மதி

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

மேற்கு ஆசிய போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடைக்கு ஒரு மாத காலம் அமெரிக்கா விலக்கு அளித்தது.

இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் பலன் பெற்று வந்தன. அமெரிக்காவின் இந்த விலக்கு, ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், இந்த விலக்கு நீட்டிக்கப்பட மாட்டாது என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடந்த 15-ம் தேதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு வழங்கப்பட்ட அனுமதி மேலும் 1 மாதம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க நிதித் துறை வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது. இதன் மூலம், அடுத்த மாதம் மே 16-ம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்படும் ரஷ்ய எண்ணெயை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கொள்முதல் செய்ய முடியும்.

ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும். தவிர பல நாடுகளும் பலன் அடையும்.

ஐரோப்பிய சிந்தனைக் குழுவான ‘ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) அறிக்கையின்படி, பிப்ரவரி மாதத்தில் குறைந்திருந்த ரஷ்ய எண்ணெய் கொள்முதல், மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரித்தது. மார்ச் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய கச்சா எண்ணெய் அளவு 3 மடங்கு அதிகரித்து 5.3 பில்லியன் யூரோக்களை எட்டியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT