புதுடெல்லி: இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, ரூ.1,27,500 கோடி மதிப்பில் ‘செமிகான் 2.0’ திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கு தொடர்ச்சியான, நீண்டகால தேவை இருப்பதை கருத்தில் கொண்டு ‘செமிகான் 1.0’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் உற்பத்தித் திறனை தக்க வைத்து கொள்வதற்கும், உலகளவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்வதற்கும் ரூ.1,27,500 கோடி மதிப்பில் செமிகான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
‘செமிகான் 2.0’ திட்டம், சிப் வடிவமைப்பில் ஏற்கெனவே கிடைத்துள்ள வெற்றியை விரிவுபடுத்த உதவும். சிப் வடிவமைப்பில் ஏற்கெனவே 105 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்துதில் இத்திட்டம் கவனம் செலுத்தும்.
செமிகண்டக்டர் உற்பத்திக்கான எந்திரங்கள், மூலப்பொருட்கள், ரசாயனங்கள், வாயுக்களின் உற்பத்தி & ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது செமிகண்டக்டர் துறையின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
முதலாவது உற்பத்தி ஆலை 2028-ல் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான நடவடிக்கைகளின் மீது உலகம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. சிப் உற்பத்திக்கான ஆலைகளை அமைக்க அதிக உற்பத்தியாளர்களை ஈர்க்கும் முயற்சிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இதில் சிலிக்கான் ஆலைகள், கூட்டு செமிகண்டக்டர் ஆலைகள், தனித்துவ பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள், காட்சித்திரை உற்பத்தி ஆலைகள் போன்றவை அமைக்கப்படும்.
செல்போன் உற்பத்தி திட்டம்: செல்போன் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. நாட்டின் செல்போன் உற்பத்தி 2024- 25 நிதியாண்டில் ரூ. 5.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. செல்போன் ஏற்றுமதி 2024-25 நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ரூ.62,500 கோடி மதிப்பில் இந்திய பிராண்ட் செல்போன் தயாரிப்பு திட்டத்துக்கு (எம்பிஎம்எஸ்) மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இத்திட்டம் இந்திய பிராண்ட் செல்போன் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் இத்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர யூரியாவை உள்நாட்டில் தயாரிப்பதற்கான தேசிய முதலீட்டுக்கொள்கை, உட்பட மொத்தம்7முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.