நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 
வணிகம்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்: மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் செயல்படும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்றாலும், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு, பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்தபோது இந்தியாவில் மாலை 5 மணி என்பது லண்டனில் பகல் நேரம் என்பதால், அவர்களது வசதிக்காக அந்த நேரத்தை கடைபிடித்தனர்.

          

1999-ம் ஆண்டு இந்த நேரத்தை அப்போதைய மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மாற்றினார். அதுமுதல், காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், கடந்த 2017-ம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்தினார். அப்போதிருந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்றாலும் அன்றைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

வழக்கமாக ஞாயிறன்று அரசு அலுவலகங்கள், பங்குச் சந்தைகள் மூடி இருக்கும். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், நாளைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இ) அறிவித்துள்ளன.

அதன்படி, நாளை காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறும். இதனால், முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை காலை வரை காத்திருக்காமல், பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப நாளையே வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT