புதுடெல்லி: இந்திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஐ.நா.வின் ஐஎப்ஏடி அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த ஆண்டில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபை சார்பில் கடந்த 1977-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் (ஐஎப்ஏடி) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட வேளாண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்தாலி தலைநகர் ரோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎப்டிஏ அமைப்பு பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளில் வறுமையை ஒழிக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில் ஐஎப்டிஏ முதல்முறையாக இந்திய தனியார் வேளாண் துறையில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காக 2026- 2033 வரைவு திட்டத்தை அந்த அமைப்பு வரையறுத்து உள்ளது. இது குறித்து அமைப்பின் துணைத் தலைவர் டோனால் பிரவுண், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஐஎப்டிஏ கொள்கை விதிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இதன்படி அரசு நிறுவனங்கள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக இந்தியாவின் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கைகோக்க உள்ளோம். அடுத்த ஆண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் 4 முதல் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவோம்.
இந்திய அரசு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுடன் இணைந்து 110 லட்சிய மாவட்டங்கள் திட்டத்தில் பங்கேற்க உள்ளோம். எங்களது திட்டங்களுக்கு நபார்டு அமைப்பும் நிதி உதவிகளை வழங்க முன்வந்திருக்கிறது.
இந்தியாவின் சிறு விவசாயிகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டு உள்ளோம். சிறு விவசாயிகளுக்காக கிராமங்களில் தானிய சேமிப்பு கிடங்குகள், உணவு பதப்படுத்துதல் கூடங்களை அமைப்போம். விவசாயிகளின் சந்தைவாய்ப்புகளை உறுதி செய்வோம்.
உலகம் முழுவதும் பருவநிலை மாறுபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழலில் பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரும் பயிர்கள் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். கோதுமை, நெல் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக சிறுதானிய சாகுபடிக்கு ஊக்கம் அளிப்போம்.
ஒரு சிறு விவசாயி 10 கிலோ அரிசி வைத்திருந்தால், அந்த அரிசியை நல்ல விலைக்கு விற்பனை செய்வது மிகவும் கடினம். எனவே சிறு விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுறவு சங்கங்களை அமைப்போம். இதன்மூலம் பல்வேறு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் அரிசியை வழங்குவார்கள். கூட்டுறவு சங்கம் மூலம் நல்ல விலைக்கு அரிசியை விற்க முடியும். இவ்வாறு ஐஎப்ஏடி துணைத் தலைவர் டோனால் பிரவுண் தெரிவித்துள்ளார்.