புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைக் சுட்டிக்காட்டி, இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) மதிப்பீட்டை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) 6.4 சதவீதமாகக் குறைத்துள்ளது. முந்தைய கணிப்பில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் நீடிப்பதாக ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியானது உலகப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாகவும், பணவீக்க அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் விவரித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் உலகளாவிய பொருளாதாரக் கண்காணிப்புப் பிரிவின் மூத்த பொருளாதார நிபுணர் இங்கோ பிட்டர்லே செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘2025-ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2026-ல் 6.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக எரிசக்தி இறக்குமதிச் செலவுகள் மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தை பிரதிபலிப்பதாகவே இது அமைந்துள்ளது’’ என்றார்.