சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.35-க்கும், வெளிச்சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50-க்கும் விற்கப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர, கர்நாடக மாநில பகுதிகளில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெயில் வாட்டி வருகிறது.
வட மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, கடந்த ஒரு வாரமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வந்தது. இதனால் கடந்த மாதம் மொத்த விலையில் கிலோ ரூ.20 வரை விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.35 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 வரை உயர்ந்து இருந்தது.
கோடைக்காலம் முடியும் வரை தக்காளி விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பீட்ரூட், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோ ரூ.20-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.