சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததால் சாகுபடி பரப்பு குறைந்து, சென்னையில் தக்காளி விலை ரூ.65 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் 8.42 லட்சம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றிலிருந்து 2.60 கோடி டன் தக்காளி உற்பத்தியாகிறது. நாட்டில் தக்காளி உற்பத்தியில் மத்திய பிரதேசம் ஆண்டுக்கு 1.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து, 27 லட்சம் டன் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆந்திர மாநிலம் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, 23 லட்சம் டன் உற்பத்தியுடன் 2-ம் இடத்திலும், கர்நாடக மாநிலம் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, லட்சம் டன் உற்பத்தியுடன் 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, 16.23 லட்சம் டன் உற்பத்தியுடன் 6-ம் இடத்தில் உள்ளது.
இதனால் தமிழக தக்காளி தேவைக்கு பிற மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் 56 சதவீதம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இவ்விரு மாவட்டங்களிலும் முறையே 17 சதவீதம், 25 சதவீதம் தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விலையில் கிலோ ரூ.46-க்கும், சில்லறை விலையில் ரூ.55-க்கும், பண்ணை பசுமை கடைகளில் ரூ.46-க்கும், சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.60-க்கும், அரும்பாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.65-க்கும் தக்காளி விற்கப்பட்டது.
தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து கோயம்பேடு தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, "இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தென்னிந்திய அளவில் 24 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. கோயம்பேடுக்கு வழக்கமாக தமிழகத்தை ஒட்டிய ஆந்திர, கர்நாடக பகுதிகளான சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி, பலமநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரும். தற்போது அப்பகுதிகளில் இருந்து கோயம்பேடுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது" என்றார்.