சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று மொத்த விலையில் கிலோ ரூ.46-க்கும், வெளிச்சந்தைகளில் சில்லறை விற்பனையில் ரூ.80 ஆகவும் விற்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.15-க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாத தொடக்கத்தில் ரூ.20 ஆக உயர்ந்த தக்காளி, நேற்று கிலோ ரூ.46 ஆக உயர்ந்துள்ளது. சந்தையில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50-க்கும், வெளிச்சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து, வீடுகளுக்கே வந்து காய்கறிகளை விநியோகிக்கும் நிறுவனங்களில் ரூ.64 முதல் ரூ.86 வரை விற்கப்படுகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.58-க்கு விற்கப்பட்டு வருகிறது.