திருப்பதி லட்டு | கோப்புப்படம்
திருமலை: திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 13.52 கோடி லட்டு பிரசாதங்களை விற்று சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தான மடப்பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில், இதன் சுவையே தனித்துவம் வாய்ந்ததாகும். அரசர் காலத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன.
வெகு தூரத்தில் இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் திருமலைக்கு வரும் பக்தர்கள், ஊர் திரும்பி செல்லும்போது வழியில் உண்பதற்கு சில நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், மிளகு வடை போன்றவை இவ்வாறு வழங்கப்பட்டு வந்தது. ஏழுமலையான் பிரசாதத்தை ‘திருப்பொங்கம்’ என்றழைத்தனர். அதன்பின்னர் இனிப்பு சுய்யம், அப்பம் (கி.பி.1455 ), வடை (கி.பி. 1460-ம் ஆண்டு), அதிரசம் (கி.பி. 1468), மனோகரப்படி (கி.பி. 1547), வழங்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் மஹந்துக்கள் திருப்பதி கோயிலை பராமரித்து வந்தபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கப்பட்டது.
1940-ம் ஆண்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு தொடர்ந்து லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகம் செய்து வருகிறது.
ஒரே நாளில் 5.13 லட்சம்: தற்போது, சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பின்னர், லட்டு பிரசாதத்தின் தரம் உயர்த்தப்பட்டது. இதனால் லட்டு பிரசாத விற்பனையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்த 2025-ல் 13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன.
கடந்த ஓராண்டாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் மட்டும் 700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் இவர்களுக்காக ஊதியமும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.