புதுடெல்லி: ‘‘கோயில்களில் உள்ள தங்கத்தை பணமாக்குதல் அல்லது தங்கப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் முற்றிலும் பொய்’’ என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் மற்றும் மற்ற வழிபாட்டு தலங்களிடம் உள்ள தங்கத்தைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதில் தங்கப் பத்திரங்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதை மத்திய நிதித் துறை அமைச்சகம் திட்டவட்டமாக நேற்று மறுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள், மத வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்திடம் உள்ள தங்கத்தை மத்திய அரசு பெற்றுக் கொண்டு தங்கப் பத்திரங்கள் வழங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் முற்றிலும் பொய். இதுபோன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அதேபோல் இதுபோன்ற செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் பிறருக்கு அனுப்ப வேண்டாம்.
கோயில்களின் தங்கத்தைப் பணமாக்கும் திட்டமோ அல்லது அவற்றுக்கு பதில் தங்கப் பத்திரம் வழங்கும் திட்டமோ மத்திய அரசிடம் இல்லை. மேலும், கோயில்களின் கோபுரங்கள் மீதுள்ள கலசங்கள், கோயில்களின் கதவுகள் மற்றும் கோயில் கட்டமைப்புகளில் உள்ள தங்கத் தகடுகள், தங்க முலாம் பூசப்பட்ட பகுதிகள், இந்தியாவின் மூலோபாய தங்க இருப்பு’ என்ற நிலைக்கு மாற்றப்படும் என்று பரவும் செய்தியும் பொய்.
அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தி. அவை அனைத்தும் தவறான செய்திகள். முற்றிலும் அடிப்படை இல்லாத செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவற்றை பரப்ப வேண்டாம். மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்த ஆதாரப்பூர்வ வெளியீடுகள் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை அறிவுறுத்துகிறோம்.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இதுபோல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புவது குழப்பத்தையே ஏற்படுத்தும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.