தருமபுரியில், பட்டுக்கூடுகளில் இருந்து பட்டுநூல் பிரித் தெடுக்கும் கூடம் ஒன்றில் நூல் பிரித்தெடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணி யாளர்கள். (கோப்புப் படம்)
தருமபுரி: கச்சா பட்டுநூல் விலை உயர்வு காரணமாக பட்டுக் கூடுகளுக்கான விலை ரூ.1,000-ஐ கடந்துள்ளது. தருமபுரி நகரில் 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது.
இந்த அங்காடியில், ஞாயிறு மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் விவசாயிகளின் பட்டுக்கூடுகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பட்டுநூல் தயாரிப்பு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த அங்காடியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பட்டுக்கூடு விலை ஒரு கிலோ ரூ. ஆயிரத்தை கடந்தது. நேற்றைய ஏல விற்பனைக்கு தருமபுரி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 22 விவசாயிகள் 1,050.650 கிலோ வெண் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தின்போது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.1,004, குறைந்த பட்ச விலையாக ரூ.641, சராசரி விலையாக ரூ.827 நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 790-க்கு வர்த்தகம் நடந்தது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ.13 ஆயிரத்து 30 வருவாய் கிடைத்தது. இந்த விலை உயர்வை பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
விலை உயர்வு குறித்து பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியதாவது: எல்-நினோ உள்ளிட்ட காரணங்களால் கோடை காலத்தை கடந்த பிறகும் வறட்சி தொடர்கிறது. இயல்பாகவே மழை, கோடை உள்ளிட்ட காலநிலை மாற்றங்களின்போது அந்தந்த தருணங்களுக்கு உரிய காரணங்களால் பட்டுக்கூடு உற்பத்தி சரிவது, தரம் குறைவது போன்ற சிரமங்கள் ஏற்படும். நடப்பு ஆண்டில் கோடை காலத்தை தொடர்ந்து எல்-நினோ தாக்கத்தால் வறட்சி நீடித்து வருகிறது.
பருவமழை குறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்ததால், பட்டுப்புழுக்களின் உணவான மல்பெரி செடிகளை போதிய அளவில் வளர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 3 வாரங்களாக கூடு வரத்து சரிவடைந்து கூடுகளுக்கான விலை உயர்ந்து வந்தது.
இதேநேரத்தில், கச்சா பட்டுநூலின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ கச்சா பட்டுநூல் ரூ.5,400 முதல் ரூ.5,800 வரை விற்பனையாகி வந்தது. தற்போது பட்டுநூல் ரூ.6,000 முதல் ரூ.6,100 வரையிலான விலையில் விற்பனையாகிறது. ஏற்கெனவே, கூடு வரத்து சரிந்ததால் கூடுகளுக்கான விலை சீராக உயர்ந்து வந்தது.
இந்நிலையில், சந்தையில் கச்சா பட்டுநூல் விலையும் உயர்வடைந்துள்ளதால் கூடுகளுக்கான விலை ரூ.1,004 ஆக உயர்ந்துள்ளது. தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் மட்டும் பட்டுக்கூடு, கிலோ ரூ.1,005 என விற்பனையானது. அதன்பிறகு, தற்போது தான் விலை ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. கூடு வரத்து உயரும் வரை சில வாரங்களுக்கு இந்த விலை நீடிக்கவும், மேலும் உயரவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினர்.தருமபுரியில், பட்டுக்கூடுகளில் இருந்து பட்டுநூல் பிரித் தெடுக்கும் கூடம் ஒன்றில் நூல் பிரித்தெடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணி யாளர்கள்.