கோயம்பேடு காய்கறி சந்தை
சென்னை: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சனிக்கிழமை (ஜன.17) விடுமுறை விடப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் சுமார் 3 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் மாட்டுப் பொங்கல் மற்றும் அடுத்த நாள் காணும் பொங்கல் விழா கொண்டாடத்தில் ஈடுபடுவார்கள். அதனால் கோயம்பேடு சந்தைக்கு சனிக்கிழமை காய்கறிகள் வரத்து இருக்காது. லாரி ஓட்டுநர்களும், கோயம்பேடு சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
எனவே, காய்கறி சந்தைக்கு சனிக்கிழமை ஒருநாள் விடுமுறை விடுவது என வியாபாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். அதே நேரத்தில், கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர், பழச்சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.