வணிகம்

2026 பட்ஜெட்: ரூ.17 லட்சம் வரை வருமான வரி விலக்கு வாய்ப்பு? - புதிய முறையில் 5 எதிர்பார்ப்புகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: எதிர்வரும் பொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.17 லட்சமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வருபவர்களுக்கு 5 முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பிப்ரவரி 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இந்த பட்ஜெட் மீது நடுத்தர வர்க்கத்தினர் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். இவர்கள் நம்பிக்கையைக் காக்கும் வகையில், புதிய வரி விதிப்பு முறையில் சில விலக்குகள் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் தெரிகின்றன.

கடந்த வருடம் பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊதியம் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வரவிருக்கும் பொது பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் வரி செலுத்துவோருக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதில், தற்போதுள்ள ரூ.12 லட்சம் என்ற வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.17 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 பொது பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வருவோருக்கு ரூ.12 லட்சம் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பலனாக, சுமார் 90 சதவீதம் பேர் புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறினர். இந்த முறையும் உயர்த்தப்படும் வரி விலக்கால் மீதம் உள்ளோரும் புதிய வரி விதிப்பு முறைக்கு மாறி விடும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும், 2026 பொது பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் நிதி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வரி விலக்குகளைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு, புதிய வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இதற்கு பொதுமக்களை மாற்ற வேண்டி புதிய வரி விதிப்பு முறையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துபவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் பழைய வரி விதிப்பு முறை இன்னும் நடைமுறையில் பலன் அளிக்கிறது.

இதனால்தான் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் புதிய வரி விதிப்பு முறையில் சில விலக்குகளைச் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகின்றனர். இந்த ஆண்டு அதை ஏற்று, பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறையில் 5 முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

புதிய வரி விதிப்பு முறையில் நீண்ட கால முதலீடு புறக்கணிக்கப்படுகிறது, ஏனெனில் அதற்கு எந்த சலுகைகளும் இல்லை. அரசாங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை அதிகரிக்க வேண்டி வரும். அப்போதுதான், முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கையுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிலை உள்ளது.

புதிய வரி விதிப்பு முறையில், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு கோரும் வசதி வழங்கவில்லை. மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதாரக் காப்பீட்டை புதிய வரி விதிப்பு முறையில் நிச்சயமாகச் சேர்க்க வலியுறுத்தப்படுகிறது.

சுகாதாரக் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற பிடித்தங்களைச் சேர்ப்பது நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். புதிய வரி விதிப்பு முறையில் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன்களுக்கும் வரிச்சலுகைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சலுகைகள் தற்போது பழைய வரி விதிப்பு முறையில் கிடைக்கின்றன. இந்தச் சலுகைகளை புதிய வரி விதிப்பு முறையிலும் சேர்ப்பது அதன் சிக்கலைக் குறைத்து, தனிநபர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

புதிய வரி விதிப்பு முறையின் கீழ் நிலையான கழிவு ரூ.50,000 ஆக இருப்பது ரூ.75,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், செலவுகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த வரம்பை மேலும் அதிகரிக்க மத்திய அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே, இந்த வரம்பு ரூ.1,00,000 அல்லது 125,000 ரூபாயாக உயர்த்தும் வாய்ப்புகளும் உள்ளன. புதிய வரி விதிப்பு முறையில் மூத்த குடிமக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் உள்ளனர். மருத்துவச் செலவுகளுக்கான வரி விலக்கு இல்லாததும், குறைந்த அடிப்படை விலக்கு வரம்பும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இந்த ஆண்டின் பொது பட்ஜெட்டில் முதியோருக்காக சில சிறப்புச் சலுகைகள் சேர்க்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த சலுகைகளை மத்திய அரசு அறிவித்தால், நிலையான கழிவில் ரூ.1 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.2 லட்சம் மற்றும் அசல் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும்.

சுகாதாரக் காப்பீட்டுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். இதில் ரூ.12 லட்சம் நேரடி வரி விலக்கையும் சேர்த்தால், மொத்த வரி விலக்கு அது ரூ.17 லட்சமாக மாறும். இந்த அறிவிப்பே வரும் பொது பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT