

கோழிக்கோடு: கேரள பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக சம்பந்தப்பட்ட பெண்ணே பதிவு செய்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் காட்டப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த நபர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் யூ (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது குடும்பத்துடன் கோவிந்தபுரத்தில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தீபக் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்துள்ளார்.
அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் பயணி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தீபக் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார்.
அந்த வீடியோவில், தீபக் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம் சாட்டினார். அவரின் தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது பாலியல் வரம்பு மீறல் என்றும் ஷிம்ஜிதா குற்றம் சாட்டினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் தனது உறவினர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோ வெளியானதிலிருந்து தீபக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தீபக் தற்கொலை செய்துகொண்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காவல் துறையின் விசாரணையின்படி, பெற்றோர் தீபக்கை எழுப்புவதற்காக ஞாயிறு காலை 7 மணிக்கு அவரது அறையின் கதவைத் தட்டியுள்ளனர். பலமுறை தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினருடன் அறைக்குள் நுழைந்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்தது.
இதுபற்றி உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அவர் குறித்து பரப்பப்பட்ட வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஷிம்ஜிதா இணையத்தில் பிரபலமடைவதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினார் என்றும், ஷிம்ஜிதா மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு தரப்பினர் காவல் துறையை வலியுறுத்தி வருகின்றனர். இணையத்தில் வியூஸ் - ட்ரெண்டிங் மோகத்தில் அந்தப் பெண் உள்நோக்கத்துடன் வீடியோ எடுத்ததாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.