புதுடெல்லி: விமானப்படை பயன்பாட்டுக்கு ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த நவீன நடுத்தர ரக போர் விமானத்தை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க விருப்ப கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதற்கு பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தன. அவற்றில் டாடா, எல் & டி மற்றும் பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து பாரத் ஃபோர்ஜ் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டம், இந்தியாவின் மிக லட்சியமான திட்டம் ஆகும். 2030-ம் ஆண்டுக்குப்பின் இந்திய விமானப் படையின் போர்த் திறனின் முதுகெலும்பாக 5-ம் தலைமுறை போர் விமானம் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு என்ஜின்கள் கொண்ட ரேடாரில் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட போர் விமானமாக இது தயாரிக்கப்படவுள்ளது. இதில், அதிநவீன சென்சார் ஃபியூஷன், ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள், மற்றும் நெட்வொர்க்-சென்ட்ரிக் போர் முறைத் திறன் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இந்த விமானத்தின் ரூ.16,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டத்துக்கு ஆந்திராவின் சத்யசாய் மாவட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கடந்த 15-ம் தேதி அடிக்கல் நாட்டினர். இதை இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயம் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்த முயற்சி ஆந்திரப் பிரதேசத்திற்கு ‘ஒரு புதிய யுகத்தை’ கொண்டு வரும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.