புனே: சர்வதேச அளவில் ஒட்டுமொத்த தர மேலாண்மை மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், ஜப்பானிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் டெமிங் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பாளரான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வணிகப் பிரிவான டாடா ஆட்டோகாம்ப் ஹென்ட்ரிக்ஸன் சஸ்பென்ஷன்ஸ் (டிஎச்எஸ்எல்), இந்த ஆண்டுக்கான டெமிங் விருதை வென்றுள்ளது. இதன் மூலம், வணிக வாகனங்களுக்கான சஸ்பென்ஷன் அமைப்பு பிரிவில் இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெறும் உலகின் முதல் தயாரிப்பாளர் என்ற பெருமையை டிஎச்எஸ்எல் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் மற்ற இரண்டு வணிகப் பிரிவுகளான காம்போசிட்ஸ் மற்றும் டாடா ஃபிகோசா ஆகியவை 2024-ம் ஆண்டில் டெமிங் விருதைப் பெற்று சாதனை படைத்தன. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனம் 3 டெமிங் விருதுகளை வென்றுள்ளது.
நிறுவனத்தின் துணைத் தலைவர் அர்விந்த் கோயல் கூறும்போது, “2024, 2025-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக டெமிங் விருதை வென்றிருப்பது, எங்கள் நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு பெருமைக்குரிய மைல்கல் ஆகும். எங்கள் குழுமத்தில் ஒட்டுமொத்த தர மேலாண்மைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை இது வலுவாக சுட்டிக்காட்டுகிறது” என்றார்.