வணிகம்

சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு: பங்குச் சந்தை நிலவரம்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முன்னேற்றம்?

வேட்டையன்

மும்பை: இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (மே 25) காலை ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - ஈரான் இடையே விரைவில் உடன்பாடு ஏற்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை சரிவடைய தொடங்கியுள்ளது. அதனால் உலக அளவில் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றம் கண்டு வருகிறது. இதன் தாக்கம் இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் ஏற்றம் கண்டது. எரிபொருள் விநியோக சங்கிலி பாதிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி உடன்பாடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. அதன்படி, மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் சுமார் 900+ புள்​ளி​கள் ஏற்றமடைந்து 76,345 என்ற நிலையை எட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் முந்தைய வர்த்தக நாளில் 75,415 என சென்செக்ஸ் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, சுமார் 260+ புள்​ளி​கள் ஏற்றமடைந்து 23,979 என்ற நிலையை எட்டியது. நிஃப்டியும் முந்தைய வர்த்தக நாளில் 23,719 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் பங்குச் சந்தை ஏற்றமடைந்துள்ளது.

இதனால் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், லார்சன் அண்ட் டர்போ, இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட 30 நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச அளவில் ஒரு பீப்பாய் கச்ச எண்ணெயின் விலை 97.76 டாலர்கள் என பிரென்ட் க்ரூட் தெரிவித்துள்ளது. சுமார் 5 சதவீதம் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாள் பாசிட்டிவாக தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர்களுக்கு கீழ் வந்துள்ளது. இருப்பினும் இப்போதைக்கு கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்தவரை கொஞ்சம் காத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது. ஏனெனில், அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கிய பிறகு இது மாதிரியான சூழல்கள் எழுந்துள்ளன. அதனால் இந்த விவகாரத்தில் தெளிவான விவரம் அவசியமானதாக உள்ளது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தால் நிச்சயம் பங்கு வர்த்தகத்தில் அது பெரிய திருப்புமுனையை தரும் என்று முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறியுள்ளார்.

ஆசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில் ஜப்பான் மற்றும் சீனாவில் வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. தென்கொரியா மற்றும் ஹாங்காங்கில் விடுமுறை காரணமாக பங்கு வர்த்தகம் நடைபெறவில்லை. அமெரிக்காவிலும் வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தை வர்த்தகம் பாசிட்டிவாக இருந்தது என தகவல் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT