சென்னை: வங்கிசாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டில் ரூ.1,834 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தைவிட 19% அதிகம்.
நிறுவனத்தின் கடன் வழங்கல் மற்றும் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஆகியவை கணிசமாக உயர்ந்ததே இந்த லாப வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் 14% அதிகரித்து ரூ.32,321 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 2026 மார்ச் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு 16% உயர்ந்து ரூ.59,908 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்து ரூ.3,376 கோடியாக உயர்ந்துள்ளது. நான்காவது காலாண்டில் இது 20 சதவீதம் உயர்ந்து ரூ.901 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் இயக்குநர் குழு, தனது பங்குதாரர்களுக்கு 240 சதவீத இறுதி டிவிடெண்டை வழங்க முடிவெடுத்து பங்கு ஒன்றுக்கு ரூ.24 வழங்க பரிந்துரை செய்துள்ளதாக சுந்தரம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.