கிருஷ்ணகிரி: இந்த ஆண்டு பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால், வேப்பனப்பள்ளி பகுதியில் சீத்தாப்பழம் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,143 சதுர கி.மீட்டரில், 2,024 சதுர கி.மீட்டர் வனப்பகுதி. இங்குள்ள சிறிய காடுகள், வனத்தை ஒட்டியுள்ள மலைக்குன்றுகளில் சீத்தாப் பழ மரங்கள் அதிகளவில் உள்ளன. இதுதவிர விவசாயிகளும் சீத்தா சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, வேப்பனப்பள்ளி, மேலுமலை, சின்னாறு, கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, அஞ்சூர், குருவிநாயனப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் சீத்தாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டில், பருவமழை உரிய நேரத்தில் பெய்ததால் சீத்தாப் பழ மகசூல் அதிகரித்துள்ளது. அத்துடன் சந்தையில் நல்ல விலையும் கிடைக்கிறது. கடந்த ஆண்டு 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு சீத்தாப்பழம் ரூ.50 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிரேடு ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால், சீத்தாக் காய்களை வியாபாரிகள் தரம் பிரித்து ஆந்திரா, கர்நாடகா, பிஹார், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. போக்குவரத்து செலவுடன், 20 கிலோ கொண்ட ஒரு கிரேடு சீத்தாப்பழம் ரூ.220 முதல் ரூ.300 வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்து உள்ளதால், தினமும் 10 டன் முதல் 20 டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மகசூல் அதிகரித்த நிலையில், விலையும் கை கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை முதல் சின்னாறு வரையில் சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் சீத்தாப்பழம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வனப்பகுதி, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் விளைந்த சீத்தாப்பழங்களை பறித்தும், மண்டிகளில் இருந்து வாங்கி வந்தும் கூறு போட்டு விற்பனை செய்கின்றனர்.
இவர்களிடம் அவ்வழியே கார், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீத்தாப்பழங்களை வாங்கிச்செல்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கும் வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.