வணிகம்

அந்நிய முதலீட்டு வரத்தால் பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (எப்ஐஐ) கவனம் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டது.

பங்குச் சந்தையில் எழுச்சி ஏன்? - அமெரிக்காவில் சில்லறை விற்பனையில் மந்தநிலை மற்றும் பலவீனமான நுகர்வோர் நம்பிக்கை குறித்து வெளியான புள்ளிவிவரங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட லாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் போதெல்லாம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் முதலீடு செய்வது வழக்கம். இது, இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். அதேபோன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

மதிப்புமிக்க பல நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்தி அந்நிய நிதி நிறுவனங்களும் (எப்ஐஐ) அவற்றை அதிகளவில் வாங்கி குவித்தன. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை தலா 1 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றன, மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது போன்றவையும் இந்திய பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு வழிவகுத்தன.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,022.5 புள்ளிகள் அதிகரித்து 85,609.51 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 320.5 புள்ளிகள் உயர்ந்து 26,205.3 புள்ளிகளில் நிலைகொண்டது.

SCROLL FOR NEXT