வணிகம்

“ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் வெறும் 10 ஆண்டுகளில் ஒரு புரட்சியாக மாறியுள்ளது” - பிரதமர் மோடி

மோகன் கணபதி

புதுடெல்லி: ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் வெறும் 10 ஆண்டுகளில் ஒரு புரட்சியாக மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் 10 ஆண்டுகளை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது: “தேசிய ஸ்டார்ட்அப் தினமான இந்த தருணத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் குழுவில், வளர்ந்து வரும் இந்தியாவின் எதிர்காலத்தைக் காண்கிறேன்.

முன்பு, புத்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தோல்விக்கான ஒரு பாதையாகவே பார்க்கப்பட்டன. இன்று, ஸ்டார்ட்அப் இந்தியாவின் 10 ஆண்டு கால நம்ப முடியாத மைல்கல்லை நாம் கொண்டாடுகிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் 500-க்கும் குறைவான ஸ்டார்ட்அப்களே இருந்தன. இன்று, அந்த எண்ணிக்கை 2,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த பத்தாண்டு காலப் பயணம் என்பது ஓர் அரசாங்கத் திட்டத்தின் வெற்றிக் கதை மட்டுமல்ல. இது உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தனிநபர்களின் கதை. இது எல்லையற்ற கற்பனை மற்றும் லட்சியத்தால் உந்தப்பட்ட ஒரு பயணம்.

2014-ல், இந்தியாவில் வெறும் நான்கு யூனிகார்ன் நிறுவனங்களே இருந்தன, ஆனால் இப்போது 125-க்கும் மேற்பட்ட செயல்படும் யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய கனவுகளை காணத் துணிந்த நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

வெறும் 10 ஆண்டுகளில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம், ஒரு புரட்சியாக மாறியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

தற்போது, ​​இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களில் 45%-க்கும் அதிகமானவற்றில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்கிறார். பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், இந்தியா உலகில் இரண்டாவது பெரிய சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.

நான் எப்போதும் ரிஸ்க் எடுப்பதை வலியுறுத்தி வருகிறேன், ஏனென்றால் அது என்னுடைய நீண்டகால பழக்கம். வேறு யாரும் செய்ய விரும்பாத பணிகள், முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களில் தோல்வியடைந்து தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பல பத்தாண்டுகளாக தவிர்த்து வந்த பணிகள் போன்றவற்றை நான் எனது பொறுப்பாகக் கருதி மேற்கொள்கிறேன்.

உங்களைப் போலவே, நாட்டிற்கு அவசியமான வேலையை யாரோ ஒருவர் செய்ய வேண்டும் என்று நானும் நம்புகிறேன். யாராவது ரிஸ்க் எடுக்க வேண்டும். இழப்பு ஏற்பட்டால், அது எனக்கு, நன்மை ஏற்பட்டால் அது என் நாட்டுக்கு; மக்களுக்கு.

முன்பு, ரிஸ்க் எடுப்பது ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் இன்று அது ஒரு பொதுவான போக்காகிவிட்டது. தங்களின் மாதச் சம்பளத்திற்கு அப்பால் சிந்திப்பவர்கள், ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் மதிக்கவும் படுகிறார்கள்.

நிறுவனங்களைத் தொடங்குவதற்கு இருந்த நீண்ட ஒப்புதல் செயல்முறைகள், அதிகாரிகளின் கெடுபிடிகள் ஆகியவை ஸ்டார்ட்அப்களுக்கு பெரும் தடைகளாக இருந்தன. இதைக் களையும் வகையில், நாங்கள் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை நிறைந்த ஒரு சூழலை உருவாக்கினோம்.

ஜன் விஸ்வாஸ் முன்முயற்சியின் கீழ், 180-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகள் குற்றமற்றவையாக ஆக்கப்பட்டுள்ளன. உங்கள் நேரத்தைச் சேமிப்பதற்காக நாங்கள் செயல்முறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நீங்கள் சட்டப் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல், புத்தாக்கத்தில் கவனம் செலுத்த முடிகிறது.

குறிப்பாக, புத்தொழில் நிறுவனங்கள் இப்போது சுய சான்றிதழ் வசதிகளால் பயனடைகின்றன. மேலும், நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலுக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன, இது நிறுவனங்கள் வளர்வதையும் புத்தாக்கம் செய்வதையும் எளிதாக்குகிறது.

ஸ்டார்ட்அப் இந்தியா என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல, அது ஒரு வானவில் பார்வை. இது பல்வேறு துறைகளை புதிய வாய்ப்புகளுடன் இணைப்பதற்கான ஒரு வழியாகும். கடந்த பத்தாண்டுகளில், டிஜிட்டல் ஸ்டார்ட்அப்கள் மற்றும் சேவைத் துறையில் நாங்கள் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளோம். இப்போது நமது ஸ்டார்ட்அப்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

நாம் புதிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். உலகின் சிறந்த தரமான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். தொழில்நுட்பத்திலும், தனித்துவமான யோசனைகளுடன் பணியாற்றுவதிலும் நாம் முன்னிலை வகிக்க வேண்டும். இங்குதான் எதிர்காலம் உள்ளது. ஒவ்வொரு முயற்சியிலும் அரசாங்கம் உங்களுடன் நிற்கிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT