சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

 
வணிகம்

‘தாயகம் திரும்புவீர், ஏனெனில்...’ - அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு கடிதம்

வேட்டையன்

தென்காசி: அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எழுதியுள்ளார். இதை எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரம்:

“பாரத தேசத்தை சேர்ந்த அன்புச் சகோதர, சகோதரிகளே... கையில் பணம் ஏதும் இல்லாது சிறந்த கல்வி அறிவு மற்றும் பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்துடன் 37 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அமெரிக்கா சென்றது போல, நீங்களும் அமெரிக்கா சென்றுள்ளீர்கள். நீங்கள் தலைசிறந்த வெற்றியை பெற்றுள்ளீர்கள். அமெரிக்கா நமக்கு நலம் சேர்த்தது. அதற்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். அதுவே நம் பாரதத்தின் வழி.

இந்தியர்கள் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்கள் எண்ணவில்லை என்றாலும் சிலர் அப்படி கருதுவது உண்டு. நமது வெற்றி அங்கு நியாயமற்றது என கருதுகிறார்கள்.

அடுத்த தேர்தலில் இதற்கு தீர்வு கிடைக்கும் என நீங்கள் கருதலாம். இருப்பினும் அது பாரத நாகரிகம் அல்லது நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும் இடையே இருக்கும். இது தீவிர வலதுசாரி அல்லது இடதுசாரிக்கு இடையிலான போர் ஆகும். இந்த மோதலில் நீங்கள் வெறும் பார்வையாளரே.

உலகம் முழுவதும் இந்தியர்கள் பெறுகின்ற மரியாதை, பெருமளவில் இந்தியாவின் வளத்தை சார்ந்தே இருக்கும். இது இப்போதும், வருங்காலத்திலும் நீடிக்கும். அதுவே இந்தியா ஏழை நாடாக இருந்தால் இந்த இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நமக்கு அட்வைஸ் கொடுத்து வதைப்பார்கள்.

இன்றைய உலகில் ஒரு தேசத்துக்கான மதிப்பும், பாதுகாப்பும் அதன் தொழில்நுட்ப திறனில் இருந்து வருகிறது. இந்தியா அதற்கான அறிவாற்றலை அதிகளவில் உருவாக்குகிறது. ஆனால், அதில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது என்பது வருந்தத்தக்க ஒன்று.

உங்களில் பலருக்கு இது கடினமானதாக இருக்கலாம். நீங்கள் தாயகம் திரும்ப வேண்டும். உங்கள் திறன் பாரத தேசத்துக்கு தேவைப்படுகிறது. நமது இளைய சமுதாயத்தை வழிநடத்த, நீங்கள் பெற்ற தொழில்நுட்பத் வழிகாட்டுதல் தேவை” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT