ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக்

 
வணிகம்

“இயற்கையுடன் நேரம் செலவிடுங்கள்” - ஸ்மார்ட்போன் ஸ்க்ராலர்களுக்கு டிம் குக் அறிவுரை

வேட்டையன்

நியூயார்க்: சில சர்வதேச நாடுகளில் பதின்ம வயதினரை ஸ்மார்ட்போன் அடிக்‌ஷனில் இருந்து மீட்கும் விதமாக சமூக வலைதள பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாளும் பொழுதும் ஸ்மார்ட்போன் உடன் நேரம் செலவிடுவதை தவிர்க்குமாறு ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.

“ஐபோன்களை மக்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. மக்கள் ஒருவருக்கொருவர் கண்களைப் பார்ப்பதை விட, தங்கள் ஸ்மார்ட்போன்களை அதிகம் பார்க்கின்றனர். அதை நான் விரும்பவில்லை. ஏனெனில், அதற்கொரு எல்லை இல்லாமல் நாளும் பொழுதும் அதன் ஸ்க்ரீனை ஸ்க்ரால் செய்து கொண்டுள்ளனர். அப்படி ஒருவர் தனது நாளை செலவிடக் கூடாது. சற்று வெளியே சென்று இயற்கையோடு நேரத்தை செலவிட வேண்டும்” என அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிம் குக் தெரிவித்துள்ளார்.

          

அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், தனிமை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (2025-26), சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு சங்கடம் அளிப்பதாக தெரிவித்தது. அதீத பயன்பாட்டினால் கவனம் சிதறல், தூக்கமின்மை, பதற்றம் மற்றும் கல்வி சார்ந்த மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவித்தது. குழந்தைகளின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை வடிவமைப்பதிலும், அவர்கள் இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களைக் காண்பதைத் தவிர்க்க எளிய சாதனங்கள் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிப்பதிலும் பள்ளிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT