கோவை: வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம்காட்டி, வட மாநிலங்களில் மூலப்பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மூடப்படுவதால் கோவையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
கோவையில் கிரில்கேட், பேப்ரிகேஷன், பவுண்டரி, வெட் கிரைண்டர், பம்ப் செட், அட்டைப் பெட்டி தயாரிப்பு, கம்ப்ரஸர் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. வணிக காஸ் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிப்பு தொடங்கியுள்ள நிலையில், மூலப்பொருட் களின் விலையேற்றமும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பாதிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு இன்ஜினியரிங் கிரில் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஐ.சாகுல் ஹமீது கூறும் போது, “மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப்பொருட்களான இரும்பு தகர ஷீட், பைப், ரூபிங் ஷீட் உள்ளிட்டவற்றுக்கு காஸ் பயன்பாடு அதிகம் என்பதால், அவை வெளிமாநிலத்தில் இருந்து வருவதில்லை.
அங்கிருந்து எங்களுக்கு விநியோகம் செய்யும் சில தொழிற்சாலைகள் காஸ் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மூடிவிட்டன. மூலப்பொருட்கள் வராத நிலையில், உற்பத்தி பாதிப்பை சந்திக்கிறோம்.
அடுத்தடுத்த மாதங்களில் இது நீடித்தால் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படும். சீசன் நேரத்தில் மூலப்பொருட்களின் விலை டன்னுக்கு ரூ.5000 உயரும் என தொழில்துறையினர் அச்சுறுத்துவதால், பலரும் விலையேற்றத்தை காரணங் காட்டி மூலப்பொருட்களை நிறுவனங்களுக்கு வாங்க மறுப்பார்கள்.
கோவையில் கிரில்கேட், கதவு, ஜன்னல் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த 10 நாட்களில் 25 சதவீதம் குறைந்துள்ளது. ஆங்கிள், பைப், ராடு உள்ளிட்டவை கிலோவுக்கு ரூ.2 உயரும்போது இயல்பாகவே அனைத்தும் விலையேறிவிடும்” என்றார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ரவீந்திரன் கூறும்போது, “சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் அத்தியா வசியமானது.
வணிக காஸ் தட்டுப்பாடு காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை 60 முதல் 65 சதவீதம் உயர்ந்துவிட்டது. வெட்கிரைண்டர் மூடி, பைப் உள்ளிட்டவற்றுக்கு பிளாஸ்டிக் தேவை. அதேபோல, ஹெச்டிபி வகையான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் மூலப்பொருட்களின் விலையை ஏற்றும்போது, அது வணிக சந்தையில் பாதிப்பை உண்டாக்குகிறது. வணிக காஸ் தட்டுப்பாட்டை காரணம் காட்டி சம்பந்தமில்லாத சில தொழில் பிரிவினரும் விலையை உயர்த்துவது வேதனை.
ஏற்கெனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் காப்பர், சில்வர், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துவிட்ட நிலையில், தற்போது பிளாஸ்டிக் விலை ஏறுவதை தொழில்துறைக்கான பாதிப்பாகவே பார்க்கிறோம்” என்றார்.