மத்திய பட்ஜெட்டில் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திற்கான (Futures and Options) பங்கு பரிவர்த்தனை வரி (STT) உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 500 புள்ளிகள் வரையிலும் சரிவை சந்தித்தன.
என்ன மாற்றம்?: பங்குச் சந்தையில் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் எஃப் அண்ட் ஓ (F&O) பிரிவில் பியூச்சர்ஸ் வரி விகிதம் 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் பிரிவுக்கான வரி விகிதம் 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தாக்கம் என்ன?: பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், இனி ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவது கூடுதல் செலவை ஏற்படுத்தும். குறிப்பாக, ஒரே நாளில் அதிக முறை வர்த்தகம் செய்யும் ‘டே ட்ரேடர்கள்’ மற்றும் பெரும் முதலீட்டாளர்களின் லாப வரம்பை இந்த வரிவிதிப்பு நேரடியாகப் பாதிக்கும்.
எஸ்டிடி உயர்த்தப்பட்டதையடுத்து இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் கணிசமாக குறைந்தன.
முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்செக்ஸ் 1546.84 புள்ளிகள் (1.88%) சரிந்து 80,722.94 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 495.20 புள்ளிகள் (1.96%) வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளில் நிலைகொண்டது.