மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளின் மதிப்பு ரூ.6.50 லட்சம் கோடிக்கு மேல் சரிந்து அதிர்ச்சி அளித்தது.
இதுகுறித்து பங்குச் சந்தை ஆய்வாளர் அவினாஷ் கோராக்ஸ்கர் கூறியதாவது: அமெரிக்க பணவீக்க புள்ளி விவரங்கள் வெளியாவதை எதிர்நோக்கி சர்வதேச சந்தைகளில் பங்கு வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்தது. ஐடி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவு பாதகமான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. ஐடி பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு நெருக்கடியை சந்தித்து வருவதையடுத்து அத்துறை பங்குகள் 7.5 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
இந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்படும் அதிக ஏற்ற இறக்கமும் பங்குச் சந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தையடுத்து சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தை சாதகமாக்கி முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததும் பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிப்டி 336 புள்ளிகள் குறைந்து 25,471 புள்ளிகளிலும் நிலைபெற்றது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.