மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது.
உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து சில நாடுகளுக்கு எதிராக 15% வரை வரி விதிக்கப்படும் என்ற அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிலைப்பாடு உலகளாவிய முதலீட்டாளர்களிடையே அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் குறிப்பாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய வெளியீடு மென்பொருள் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்டெக் போன்ற ஐடி துறை பங்குகள் 6 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
இவைதவிர, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் சந்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நேற்று ஒரே நாள் வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.464 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 82,225-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 288 புள்ளிகள் சரிவடைந்து 25,424 புள்ளிகளில் நிலைத்தது.