சென்னை: இந்தியாவின் மின்சார வாகன பயணத்தில் முக்கிய கட்டத்தை குறிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், இ-விதாரா (e-VITARA) என்ற தனது முதல் முழுமையான மின்சார எஸ்யுவி கார் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
பேட்டரியை மாற்றிக் கொள்ளும் (Battery-as-a-Service) திட்டத்தின் கீழ் இதன் அறிமுக விலை ரூ.10.99 லட்சம் முதல் தொடங்குகிறது. மேலும், பேட்டரிக்கான இஎம்ஐ கிலோ மீட்டருக்கு ரூ.3.99 முதல் வழங்கப்படுகிறது.
இ-விதாரா இரண்டு பேட்டரி விருப்பங்களில் (61kWh, 49kWh) கிடைக்கிறது. முழு சார்ஜில் அதிகபட்சமாக 543 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் திறன் கொண்டது. 8 ஆண்டு அல்லது 1,60,000 கி.மீ (எது முதலில் வருமோ அது வரை) பேட்டரி உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே 7.4 கேடபிள்யு ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வசதி, ஒரு வருடம் இ பார் மி (e for me) செயலியின் மூலம் இலவச சார்ஜிங் வசதி உள்ளது.
மேலும் காரை வாங்கி 3 மற்றும் 4 ஆண்டுகளில் விற்க நினைப்போருக்காக, திரும்பப்பெறும் (Assured Buyback) வசதியும் வழங்கப்படுகிறது.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் Level 2 ADAS (பாதுகாப்பு உதவியாளர்), 7 ஏர்பேக், 5 நட்சத்திர பாரத் NCAP பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் அடுத்த தலைமுறை சுசூகி கனெக்ட் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.