வணிகம்

ரூ.10,000 நிவாரணம் வழங்க ஸ்விக்கி, சொமாட்டோ டெலிவரி ஊழியர் சங்​கம் கோரிக்கை

வணிக காஸ் சிலிண்​டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வணிக ரீதியி​லான சமையல் காஸ் தட்​டுப்​பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்​கப்​பட்ட டெலிவரி ஊழியர்​களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்​டும் என இந்​திய கிக் மற்​றும் பிளாட்​பார்ம் தொழிலா​ளர்​கள் சங்​கம் (GIPSWU) மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​தச் சங்​கம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர்ப் பதற்​றத்​தால், உணவகங்​கள், தாபாக்​கள் மற்​றும் ‘கிளவுட் கிச்​சன்​’களுக்​குத் தேவை​யான வணிக ரீதியி​லான காஸ் சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், உணவகங்​கள் தங்​கள் செயல்​பாடு​களை 50 முதல் 80 சதவீதம் வரை குறைத்​துள்​ளன.

இதன் நேரடிப் பாதிப்​பாக, ஸ்விக்​கி, சொ​மாட்​டோ போன்ற செயலிகள் வாயி​லாக உணவு விநி​யோகம் செய்​யும் தொழிலா​ளர்​களுக்கு வரும் ஆர்​டர்​களின் எண்​ணிக்கை வெகு​வாகக் குறைந்​து​விட்​டது. நாளொன்​றுக்கு 30 டெலிவரி​கள் செய்து வந்த ஒரு தொழிலா​ளிக்​கு, தற்​போது 5 முதல் 10 ஆர்​டர்​கள் மட்​டுமே கிடைக்​கிறது. இதனால் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          

நிலை​யான ஊதி​யம், சமூகப் பாது​காப்பு இல்​லாத இந்​தத் தொழிலா​ளர்​கள், வரு​மானமின்​றித் தவிக்​கின்​றனர். எங்​கள் உறுப்​பினர்​கள் உணவின்றி வாடு​கின்​றனர்; பல குடும்​பங்​கள் ஒரு​வேளை உணவைத் தவிர்க்​கும் நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளன. குழந்​தைகளின் கல்வி மற்​றும் அத்​தி​யா​வசி​யத் தேவை​களைக் கூட பூர்த்தி செய்ய முடி​யாத சூழலில் தொழிலா​ளர்​கள் உள்​ளனர்.

மேலும், ஆர்​டர்​கள் குறைந்​ததைக் காரணம் காட்​டி, நிறு​வனங்​கள் தொழிலா​ளர்​களின் ‘ஐடி’களை (ID) முடக்​கு​வ​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன. இது தொழிலா​ளர்​களைக் கடன் சுமை​யிலும், வேலை​யில்​லாத் திண்​டாட்​டத்​தி​லும் தள்​ளி​யுள்​ளது.

இந்த மனி​தாபி​மான நெருக்​கடியைத் தீர்க்க மத்​திய தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் தலை​யிட வேண்​டும். பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு தொழிலா​ளிக்​கும் உடனடி​யாக ரூ.10,000 நிவாரண நிதி வழங்​க வேண்​டும். உணவகங்​களுக்​குத் தடை​யில்லா காஸ் விநி​யோகத்தை மத்​திய அரசு உறுதி செய்ய வேண்​டும். அடுத்த 3 மாதங்​களுக்​குத் தொழிலா​ளர்​களின் ‘ஐடி’களை முடக்​கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT