தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி, ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கால்நடை விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகை தினத்தில் கிராமப் புறங்களில் கடவுளுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். இதனால் பண்டிகையொட்டி, சந்தைகளில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி, நேற்று குந்தராப்பள்ளி கிராமத்தில் நடந்த வாரச் சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
ஆடுகளை விற்கவும், வாங்கிச் செல்வும் விவசாயிகள், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஆடுகள் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையாதால், இறைச்சிக் கடைகள் ஆட்டுக்கறி விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகளும், வியாபாரிகளும் கூறியதாவது: “தீபாவளிப் பண்டிகைக்காக ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கான வியாபாரிகள் காலை முதலே குவிந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகும். நேற்று 10 கிலோ கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. அதிகப்பட்சம் ஒரு ஜோடி ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் சுமார் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும்” என்றனர். இதே போல் நாட்டுக்கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.