படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை: தட்டுப்பாடு காரணமாக வணிக காஸ் சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், வீதியோர கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் கோவையில் மூடப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் ஏராளமான வீதியோர கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் உள்ளன.
தேநீர் கடைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் 3 நேர உணவகம், இரவு நேர டிபன் கடைகள் என பல்வேறு பகுதிகளிலும் கடைகள் உள்ளன. தொழில் நகரமான கோவையில் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி வேலைக்கு சென்றுவருகின்றனர்.
குடும்பங்களை பிரிந்து அறை எடுத்து தனியாக வசிக்கும் பெரும்பாலானவர்கள் சிறு உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்களையே நம்பி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரிய ஓட்டல்கள் மட்டுமின்றி, சிறு உணவகங்கள் நடத்தி வருவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய ஓட்டல்களை நடத்துவோர் விறகு, மின் அடுப்பு உள்ளிட்ட மாற்று எரிபொருளை பயன்படுத்தியும், அதற்கேற்ப உணவுகளின் விலையை உயர்த்தியும் சமாளிக்கின்றனர்.
ஆனால், சாலையோர உணவகம் நடத்துபவர்களோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை செம்மொழிப் பூங்கா அருகே சிற்றுண்டி கடை நடத்தி வரும் வசந்தி கூறும்போது, “கடந்த 25 ஆண்டுகளாக சாலையோரத்தில் கடை நடத்தி வருகிறோம்.
ஆனால் தற்போது வணிக காஸ் சிலிண்டர் விலை பல மடங்கு உயர்ந்து, பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு ரூ.1928-க்கு விற்ற வணிக காஸ் சிலிண்டர், தற்போது ரூ.115 உயர்ந்து ரூ.2043.50 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் வணிக காஸ் சிலிண்டர் கிடைப்பதில்லை. தட்டுப்பாட்டை காரணம்காட்டி மும்மடங்குக்கு மேல் விலையை உயர்த்தி, ரூ.5,200 முதல் ரூ.5,500 வரை விற்கின்றனர். எங்களுக்கு காஸ் கிடைக்காததால் கடையை 3 நாட்கள் நடத்தவில்லை.
அதேபோல, சிற்றுண்டி கடை என்பதால் உணவுப் பொருள் விலையையும் உயர்த்த வேண்டியுள்ளது. ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரை 2 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் தற்போது விலையேற்றத்தின் காரணமாக பானிபூரி, பேல்பூரி உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தும் போது, வாடிக்கையாளர்கள் வேறு கடைகளுக்கு சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். நெருப்பில் அதிகம் வேகும் பரோட்டா, சில்லி உள்ளிட்டவற்றை பல கடைகள் விற்பதில்லை.
சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் முறைகேடான விலையேற்றம் காரணமாக பல கடைகள் மாநகரில் மூடப்பட்டு கிடக்கின்றன.
பலகாரங்களுக்கு அதிக எரிபொருள் தேவைப்படும் என்பதால், பஜ்ஜி, வடை உள்ளிட்ட பலகாரங்களின் விலை ரூ.7-லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
வடகோவையை சேர்ந்த பழனிசாமி கூறும்போது, “பெரிய உணவகங்களே சிலிண்டர் பயன்பாட்டை தொடர முடியாமல் பல விதமான உணவுகளை ரத்து செய்துவிட்டன.
இந்நிலையில், தெருவோர கடைகளின் நிலைமை பெரும் சிரமம்தான். தெருவோர கடைகளில் எரிபொருள்தான் பிரதானம்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அடுப்பை பற்ற வைக்க பலமுறை யோசிக்கிறோம். சந்தையில் முறைகேடாக சிலிண்டர் ரூ.5,500 வரை விற்கிறார்கள்.
பலரும் தொழில் செய்தால் போதும் என்ற நிலையில் இருப்பதால், இது தொடர்பாக யாரும் புகார் செய்வது இல்லை.
கோவை மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தெருவோர கடைகள் முறைகேடான வணிக காஸ் சிலிண்டர் விற்பனையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடை வாடகை, ஆள் கூலி, செலவு போக எஞ்சும் லாபம் சிலிண்டருக்கே செலவாகிறது.
இதனால் உழைப்புக்கான ஊதியம் கூட கிடைக்காததால் பலரும் கடை நடத்த முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம்” என்றார். வாடிக்கையாளர்கள் கூறும்போது, “நாள்தோறும் கோவை மாநகரில் ஏராளமான கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இப்படி நாடு முழுவதும் மூடப்படும் கடைகளால் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
கோவை போன்ற தொழில் நகரத்தில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளியூர்களில் இருந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கான சிறு உணவகங்களை மூடுவதன் மூலம், பெரும் சிரமங்களை நாள்தோறும் சந்திக்கின்றனர்” என்றனர்.