மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய ‘ரூமி ட்வின்’ இரட்டை ராக்கெட் திட்டத்தில், ரூமி-1 ராக்கெட் நேற்று காலை 7.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ரூமி-2 ராக்கெட் ஏவப்படவில்லை. நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், தையூரில் செயல்பட்டு வரும் ‘ஸ்பேஸ்சோன் இந்தியா’ நிறுவனத்தை இளம் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் நடத்தி வருகிறார். தனியார் விண்வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்டுகளை உருவாக்கி ஏவும் முயற்சியாக ‘ரூமி ட்வின் மிஷன்’ வடிவமைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திரயான் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனைகளும் இந்த முயற்சியில் இடம்பெற்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூமி-1, ரூமி-2 என இரண்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன. ஹைபிரிட் உந்துவிசைத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இவை, மறுதொடக்க இயக்க அமைப்பையும் கொண்டுள்ளன. தலா 3.1 மீட்டர் நீளமும், 164 மில்லி மீட்டர் விட்டமும், 35 கிலோ எடையும் கொண்ட இந்த ராக்கெட்டுகள், 100 செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரோவின் அனுமதியுடன் திருவிடந்தை கடற்கரையில் ஏவுதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாமல்லபுரம் அருகே கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏவுதளம் திருவிடந்தைக்கு மாற்றப்பட்டது. ராக்கெட்டின் செயல்பாடுகள் ஈசிஆரில் உள்ள தனியார் வளாகத்தில் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை, மார்ட்டின் குழும இயக்குநர்கள் லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர். தனியார் விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், இரட்டை ராக்கெட் திட்டத்தின் ரூமி-1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ரூமி-2 ராக்கெட் ஏவப்படவில்லை.